தமிழகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 27ஆம் தேதி வரை அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், அரபிக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு திசையை நோக்கி மெதுவாக நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். அதே போல, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.



