தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆட்சியில் 2016-2017 முதல் 2020-2021 வரை 4 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மொத்த நெல் 1 கோடியே 13 லட்சத்து 51,469 மெட்ரிக் டன். இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 22 லட்சத்து 70,293 மெட்ரிக் டன் மட்டுமே. ஆனால், திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டுக்குப்பின் தற்போது வரை 4 ஆண்டுகளில் மொத்தம் 1 கோடியே 70 லட்சத்து 45,545 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 42 லட்சத்து 61,386 மெட்ரிக் டன் ஆகும்.
அதாவது முந்தைய ஆட்சியைவிட இந்த அரசு 19 லட்சத்து 91,093 மெட்ரிக் டன் கூடுதலாகக் கொள்முதல் செய்துள்ளது. தமிழகத்தில் நடப்பு நெல் கொள்முதல் பருவம் செப்.1-ம் தேதி தொடங்கி கொள்முதல் செய்யப்பட்ட 10.40 லட்சம் மெட்ரிக் டன்களில் 8.77 லட்சம் மெட்ரிக் டன் மாவட்டங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுவிட்டது. மீதம் 1.63 லட்சம் மெட்ரிக் டன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தினமும் 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலுக்காக 57 லட்சத்து 63,203 சாக்குகளும், 58 மெ.டன் சணல்களும், 28,856 பிளாஸ்டிக் தார்ப்பாய்களும் இருப்பில் உள்ளன.
தினமும் 4,000 லாரிகள் மூலமாகவும், 13 முதல் 15 ரயில்கள் மூலமாகவும் நெல்கள் கிட்டங்கிகளுக்கு தினசரி 35,000 மெ.டன் என்ற அளவில் நகர்வு செய்யப்படுகிறது. செப்டம்பர் 1-ம் தேதி முதலே நெல் கொள்முதல் பணிகளை முடுக்கிவிட்டு உடனுக்குடன் மாவட்டங்களுக்கு நெல்லை அனுப்புவதிலும் சிறப்பான பணிகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் பாதுகாத்துவருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



