அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கப்போவதாக கூறிய செங்கோட்டையன், கடந்த வாரம் பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்..
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியதை வழக்கு தொடரப்படும் என்று கூறியிருந்தார்.. மேலும் இபிஎஸ் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் மட்டுமே என்றும் தெரிவித்திருந்தார்..
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார் செங்கோட்டையன்.. ஆம்.. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் “ நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையான கட்சி அல்ல.. அதிமுகவின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும்..” என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டின் ஷிண்டேவாக செங்கோட்டையன் மாறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.. அதாவது மகாராஷ்டிராவில் ஒன்றாக இருந்த சிவசேனா கட்சியை உடைத்தது பாஜக.. ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து வெளியேறினார்.. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதால் முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகினார்.. இதையடுத்து பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல்வரானார்..
மேலும் எம்.எல்.ஏக்கள் ஆதரவு, கட்சி அமைப்புகளில் அவர்களுக்கு உள்ள ஆதரவு குறித்த ஆவணங்களின் அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே அணி தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்தது.. மேலும் சிவசேனாவின் வில், அம்பு சின்னம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கே சொந்தம் என்றும் தெரிவித்திருந்தது.
மகாராஷ்டிராவில் எப்படி சிவசேனாவை உடைத்து பாஜக ஆட்சியை பிடித்ததோ, அதே ஃபார்முலாவை தான் பாஜக தமிழ்நாட்டிலும் செய்ய திட்டமிட்டுள்ளதாம்.. செங்கோட்டையனின் முடிவுகளின் பின்னணியில் பாஜக இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.. செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை அடிக்கடி சந்தித்து பேசியிருப்பதும் அதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்தது..
ஆனால் டிசம்பர் மாதத்திற்குள் அதிமுக மீண்டும் ஒருங்கிணைக்கப்படும் என்றும், அதற்கு தடையாக இருக்கும் பட்சத்தில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இபிஎஸ் நீக்கப்படுவார் என்றும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சில முக்கிய தலைவர்களே கூறி வருகின்றனர்.. பாஜகவும் அதற்கு ஓ.கே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது..
எனவே செங்கோட்டையன் தற்போது தேர்தல் ஆணையத்திற்கு எழுதி உள்ள கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைத்துள்ளார்.. குறிப்பாக இரட்டை இலை சின்னம் குறித்தும் அவர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி உள்ளார்.. தேர்தல் ஆணையம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.. ஒருவேளை செங்கோட்டையன் தரப்பு தான் உண்மையான அதிமுக என்றும், அவருக்கு தான் இரட்டை இலை சின்னம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டால்.. அவ்வளவு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிடும்..
அதிமுகவின் பொதுச்செயலாளராக செங்கோட்டையனை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் அவரின் தலைமையின் கீழ் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என பிரிந்தவர்கள் அனைவரையும் சேர்த்துக் கொண்டு ஒருங்கிணைந்த அதிமுகவாக மாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் மாஸ்டர் பிளான் என்றும் கூறப்படுகிறது.. எனினும் பாஜகவின் திட்டம் எந்தளவுக்கு நிறைவேறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..



