தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதற்கிடையில், அதிமுகவில் அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைக்காமல் சிரமப்படும் சில முக்கிய தலைவர்கள், எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் திமுக பக்கம் நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதிமுக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கத்தில், திமுக ‘ஆபரேஷன் அதிமுக’ என்ற பெயரில் ஒரு ரகசியத் திட்டத்தை தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்ட செயலாளர்களிடம் அதிமுக நிர்வாகிகளை தொடர்புகொண்டு, திமுகவிற்கு வரச் செய்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மேற்கு அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், ஓசூர் மாநகர கிழக்கு மண்டல குழு தலைவர் புருஷோத்தம ரெட்டி உள்ளிட்டோர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை இவர்களின் ஆதரவாளர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



