மத்திய காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் (Oriental Insurance Company Limited) காலியாக உள்ள நிர்வாக அதிகாரிகள் (Administrative Officers – AO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
OTCL Administrative Officers Recruitment 2025 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, நடப்பு ஆண்டில் மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 285 பணியிடங்கள் பொதுப் பிரிவு (Generalist) ஆகவும், 15 பணியிடங்கள் இந்தி அதிகாரி (Hindi Officer) ஆகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோர் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக மற்றும் செயல்பாட்டு பணிகளில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் முக்கியமான பொதுக் காப்பீட்டு நிறுவனத்தில் நிரந்தர பணிநியமனம் கிடைப்பதால், இந்த அறிவிப்பு வேலை தேடுபவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பணியிட விவரம்
- நிர்வாக அதிகாரி – 300
- பொதுப்பிரிவு – 285
- இந்தி – 15
கல்வித்தகுதி: நிர்வாக அதிகாரி (Administrative Officer – Generalist) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தி அதிகாரி (Hindi Officer) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள்,
ஆங்கிலத்துடன் கூடிய இந்தியில் முதுகலை பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும், அல்லது
இந்தியுடன் ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு பாடங்களையும் கொண்டு முதுகலை பட்டம் பெற்றவர்களும் இந்த பதவிக்கு விண்ணப்ப செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பதார்கள் 1995 டிசம்பர் 1 தேதிக்குள் முன்னரும், 30.11.2004 தேதிக்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. மத்திய அரசு விதிகளின்படி வயதில் தளர்வு உள்ளது.
சம்பளம்: நிர்வாக அதிகாரி பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.50,925 ஆகும். அதன்படி, ரூ.50,925 முதல் 96,765 வழங்கப்படும். ஒரு மாதத்திற்கு தோராயமாகும் ரூ.85,000 சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் மூன்று கட்டத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் நடைபெறும் முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு கொள்குறி முறையில் நடைபெறும். இதில் ஆங்கிலம், நுண்ணறிவு மற்றும் பகுத்தறியும் திறன் தொடர்பான கேள்விகள் இடம்பெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.
அடுத்து நடைபெறும் முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு கொள்குறி முறையில் நடைபெறும். இதற்குடன் 30 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு (விரிவான விடை) நடத்தப்படும். இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடைபெறும். முதன்மைத் தேர்வில் வெற்றி பெறும் நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் போது, தேவையான அனைத்து சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த மூன்று கட்டங்களுக்கு பிறகே இறுதி தேர்வு செய்யப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விருபுவோர் https://orientalinsurance.org.in/careers என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 15 டிசம்பர் 2025 ஆகும்.



