உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, அவர்களின் உடல்களை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் கர்ஹி தௌலத் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஃபாரூக்.
தகவலின்படி, ஃபாரூக்கின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் ஒரு மாதத்திற்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது மூவரும் பர்தா அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தனது நம்பிக்கைகளுக்கு எதிராக நடந்ததாகக் கூறி, மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக அவர் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததால், தனது 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு மகள்களையும் கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்பகுதி மக்கள் ஃபாரூக் குறித்து கூறுகையில், “ஃபாரூக் மனநிலை சரியில்லாதவர். மிகவும் கடுமையாக நடந்து கொள்வார். அவர் வெளியே செல்லும்போதெல்லாம் மனைவி மற்றும் மகள்களை வீட்டிற்குள் அடைத்து பூட்டு வைத்துவிடுவார். அவரது இரண்டு பிள்ளைகளை இதுவரை பள்ளிக்கு கூட அனுப்பவில்லை என கூறினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.பி. சிங் கூறுகையில், “கிராமத் தலைவர் மூலம் ஃபாரூக்கின் இரண்டு மகள்கள் காணவில்லை என்ற தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, குடும்பத்திற்குள் ஏற்பட்ட தகராறு, பர்தா தொடர்பான பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்தது என்பது தெரிய வந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
Read more: திமுகவின் அடுத்த மூவ்; கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழு.. பரபரக்கும் தேர்தல் களம்..!



