நடைபயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவும் ஒரு எளிய பயிற்சி மட்டுமல்ல; இதய ஆரோக்கியம், சர்க்கரை கட்டுப்பாடு, ரத்த அழுத்த சமநிலை, மனஅழுத்தக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல நன்மைகளையும் வழங்கும் சிறந்த உடற்பயிற்சியாகும். அதே நேரத்தில், படிக்கட்டுகளில் ஏறுதல் என்பது குறுகிய நேரத்தில் அதிக சக்தி செலவாகும் பயிற்சியாக கருதப்படுகிறது. இதனால் உடலின் பல தசைகள் ஒரே நேரத்தில் செயல்பட்டு, கொழுப்பு எரிப்பு வேகம் அதிகரிக்கிறது. இந்தக் கட்டுரையில், எது அதிக கலோரிகளை எரிக்கிறது மற்றும் எடையைக் குறைக்கிறது என்பதை பார்ப்போம்.
உடற்பயிற்சி மட்டும் செய்தால் எடையைக் குறைக்க முடியும் என்பது தவறான நம்பிக்கை. சரியான உணவுப் பழக்கமும், ஒழுங்கான உடற்பயிற்சியும் இணைந்தால் மட்டுமே நீடித்த எடை குறைப்பு சாத்தியமாகும். உதாரணமாக, அன்றாட வாழ்க்கையில் வெள்ளை சர்க்கரைப் பயன்பாட்டை குறைத்தாலோ அல்லது முற்றிலும் நிறுத்தினாலோ, காபி, தேநீர் போன்ற பானங்களை தவிர்த்தாலோ, உடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நீங்கள் உணர முடியும். இதனுடன் தினசரி நடைபயிற்சியை இணைத்தால், உடல் எடை குறைப்பு இன்னும் வேகமாகும்.
படிக்கட்டுகளில் ஏறுதல் vs நடைபயிற்சி: நடைபயிற்சி உடலுக்கு நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், படிக்கட்டுகளில் ஏறுவது, நடப்பதை விட அதிக கலோரிகளை எரிக்கும் பயிற்சி என்பது பலருக்கும் தெரியாத உண்மை. காரணம், படிக்கட்டு ஏறும் போது கால்கள், தொடைகள், இடுப்பு உள்ளிட்ட பல தசைகள் ஒரே நேரத்தில் அதிகமாக வேலை செய்கின்றன. இதனால், குறுகிய நேரத்திலேயே அதிக சக்தி செலவாகி, கொழுப்பு எரிப்பு வேகம் அதிகரிக்கிறது.
படிக்கட்டுகளில் ஏறுவது, சாதாரண நடைபயிற்சியை விட வேகமாக கலோரிகளை எரிக்க உதவும் பயிற்சியாகும். படிக்கட்டு ஏறும் போது, உடல் ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட வேண்டியிருப்பதால், நடப்பதை விட அதிக அளவு சக்தி செலவாகிறது. இந்த கூடுதல் சக்தி செலவினால், உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் (Metabolism) அதிகரிக்கிறது, அதனால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்படுகின்றன, இதன் தொடர்ச்சியாக கொழுப்பு குறைப்பு மற்றும் எடை இழப்பு ஏற்படுகிறது.
மேலும், படிக்கட்டு ஏறும் பயிற்சி கால்கள், தொடைகள் மற்றும் இடுப்பு தசைகளை வலுப்படுத்தி, குறுகிய நேரத்தில் அதிக உடற்பயிற்சி பலனை வழங்குகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 15 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறுவது, 45 நிமிடங்கள் வேகமாக நடப்பதற்குச் சமம். எனவே, அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது அலுவலகங்கள் என எங்கு வேண்டுமானாலும் படிக்கட்டுகளில் ஏறுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
படிக்கட்டு ஏறுவது ஏன் சிறந்த பயிற்சி? நடைபயிற்சி செய்யும் போது, உடலின் இயக்கம் பெரும்பாலும் கிடைமட்டமாக (Horizontal movement) இருக்கும். இதனால், உடல் குறைந்த அளவு சக்தியை மட்டுமே செலவழிக்கிறது. எடையைக் குறைக்க நடைபயிற்சி பயன் தர வேண்டுமானால், விறுவிறுப்பான (Brisk walk) நடைப்பயிற்சி அவசியம். குறைந்தது 30 நிமிடங்கள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும்.
ஆனால், படிக்கட்டுகளில் ஏறும் போது, உடல் ஈர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கி (Vertical movement) செயல்படுகிறது. இதனால், குறைந்த நேரத்திலேயே அதிக சக்தி செலவாகிறது, கலோரி எரிப்பு வேகம் அதிகரிக்கிறது, அதனால் எடை குறைப்பு விரைவாக நிகழ்கிறது. அதனால், நேரம் குறைவாக இருப்பவர்களுக்கும், குறுகிய நேரத்தில் அதிக பயன் பெற விரும்புபவர்களுக்கும் படிக்கட்டு ஏறும் பயிற்சி ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.
படிக்கட்டு ஏறுவது ஏன் சிறந்த பயிற்சி?
- நீங்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால், உங்கள் கால்களுக்கு மட்டுமல்ல, உங்கள் முழு உடலுக்கும் உடற்பயிற்சி செய்கிறீர்கள்.
- உங்கள் மூட்டுகள் மற்றும் கீழ் உடல் தசைகளை வலுவாக வைத்திருக்க இந்த பயிற்சி சிறந்த தேர்வாகும்.
- அலுவலகங்களில் லிஃப்டில் ஏறுவதற்குப் பதிலாக படிக்கட்டுகளில் ஏறலாம். இது உடலுக்கு நல்ல பயிற்சி.
- விரைவாக படிக்கட்டுகளில் ஏறுவது நல்ல கார்டியோவாகச் செயல்பட்டு இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
- நடப்பவர்கள் வாரத்தில் 2 நாட்கள் படிக்கட்டு ஏறும் பயிற்சி செய்யலாம். இது எடை குறைக்க உதவுகிறது.



