தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களின் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் பி.எஃப் (EPFO) திட்டத்தில், மத்திய அரசு ஒரு புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதுவரை பி.எஃப் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நடைமுறை இருந்தது. ஆனால், இனி உங்கள் மொபைலில் உள்ள UPI செயலி மூலமே நொடிப் பொழுதில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.
தற்போதைய நடைமுறையின்படி, மருத்துவச் செலவு அல்லது அவசர தேவைகளுக்காக பி.எஃப் பணத்தை எடுக்க விரும்பினால், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்து, அது சரிபார்க்கப்பட்டு வங்கிக் கணக்கிற்கு வர சில நாட்கள் ஆகும். இந்த முறையை எளிதாக்கும் வகையில், மத்திய அரசு ஒரு புதிய பிரத்யேக செயலியை (App) உருவாக்கி வருகிறது.
இந்தச் செயலி மூலம், தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான தொகையை நேரடியாக தங்களது வங்கிக் கணக்கிற்கு UPI வாயிலாக மாற்றிக்கொள்ள முடியும். இந்தப் புதிய வசதியின் சிறப்பம்சமே, கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் எடுக்காமல், அந்த நேரத்தில் உங்களுக்கு எவ்வளவு தேவையோ, அந்த தொகையை மட்டும் எடுத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகை பி.எஃப் கணக்கிலேயே இருக்கும் என்பதால், அதற்குரிய வட்டிப் பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். மேலும், இந்தச் செயலிலேயே உங்கள் கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது, அவசர தேவைக்கு எவ்வளவு பணம் எடுக்க அனுமதி உண்டு போன்ற அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் பார்த்துக்கொள்ளலாம்.
ஏப்ரல் முதல் புதிய வசதி :
மத்திய அரசு தீவிரமாக உருவாக்கி வரும் இந்தத் தொழில்நுட்ப வசதி, வரும் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், தொழிலாளர்களின் நிதிச் சுதந்திரத்தை உறுதி செய்யும் ஒரு முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவசர காலங்களில் கடன் வாங்க வேண்டிய சூழல் குறைந்து, ஊழியர்கள் தங்களின் சொந்தப் பணத்தை எளிதாகப் பயன்படுத்த வழிவகை ஏற்படும்.



