கிரேட்டர் நொய்டாவில் இரண்டு பெண்கள் உட்பட 4 நபர்கள், பூட்டிய வீட்டிற்குள் சடலமாகக் கிடந்தனர். எரிவாயு கசிந்ததே இவர்களின் மரணத்திற்கு காரணம் என்று, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் துஸ்யானா பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பூட்டிய வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வருவதை கவனித்த அக்கம் பக்கத்தினர், இதனை வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தனர்.
வீட்டின் உரிமையாளர் ஈகோடெக்-3 காவல் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில், விரைந்து வந்த காவலர்கள் உள்பக்கமாக பூட்டி இருந்த வீட்டின் இரும்புக் கதவை உடைத்து திறந்தனர். அங்கே இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் சடலமாகக் கிடந்தனர். சடலங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த அறையில் உள்ள அடுப்பில் உருளைக்கிழங்கு கருகி இருப்பதை கண்டனர். அடுப்பு எரிந்த நிலையில் இருந்தது. சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக, அந்த நால்வரும் மூச்சு திணறி இறந்திருக்ககூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் சந்திரேஷ் சிங், அவரது மனைவி நிஷா, சகோதரர் ராஜேஷ் மற்றும் சகோதரி பாப்லி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் ஹத்ராஸைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் 20 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாட்களாக இந்த வீடு பூட்டி இருப்பதாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
காவல் உதவி ஆணையர், சுமித் சுக்லா கூறுகையில், “இறந்தவரில் ஒருவர் தினக்கூலி. இன்னொருவர் அந்தப் பகுதியில் தள்ளு வண்டியில் பராத்தா விற்று வந்தவர். அவர்கள் உருளைக்கிழங்கை அடுப்பில் வைத்து சமைக்கும் போது, சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த அறையில் ஜன்னல் இல்லாததால் அனைவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். உன் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது”, என்று தெரிவித்தார்.