அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து விபத்து.. 250 பேரின் நிலை என்ன..?

Boat capsizes in Andaman Sea

தெற்கு டெக்னாஃப் பகுதியிலிருந்து சுமார் 280-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு மலேசியா நோக்கிச் சென்ற மீன்பிடிப் படகு, அந்தமான் கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த காற்று, கொந்தளிப்பான கடல் அலைகள் மற்றும் படகின் கொள்ளளவை விட அதிகமான நபர்கள் ஏற்றப்பட்டிருந்தது விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்தப் படகில் ரோஹிங்கியா மக்கள் உட்பட மியான்மர் மற்றும் வங்கதேசம் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உயிர் பிழைத்தவர்களின் வாக்குமூலப்படி, படகு கவிழ்ந்த பின்னர் அவர்கள் சுமார் 36 மணி நேரம் கடலில் தத்தளித்துள்ளனர். கடும் காற்று மற்றும் அலைகள் காரணமாக நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாகவும், படகு கவிழ்வதற்கு முன்பே மூச்சுத்திணறல் காரணமாக பலர் உயிரிழந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியா நோக்கிச் சென்ற ‘மேக்னா பிரைடு’ (Meghna Pride) என்ற வணிகக் கப்பல் கடலில் மிதந்து கொண்டிருந்த 9 பேரை கண்டுபிடித்து மீட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

படகில் இருந்ததாக கூறப்படும் சுமார் 250 பேரின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது. மீட்கப்பட்டவர்களில் 6 பேர் மனிதக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் தெரிவித்ததாவது, “இந்த பேரழிவு, ரோஹிங்கியா மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகால இடப்பெயர்ச்சி பிரச்சினையையும், அவர்களுக்கான நிரந்தரத் தீர்வு இல்லாத நிலையையும் வெளிப்படுத்துகிறது” என கூறியுள்ளது. மியான்மர் நாட்டில் இருந்து தப்பிச் செல்லும் ரோஹிங்கியா அகதிகள், வங்கதேசம் முகாம்களில் தங்கி வாழ்ந்து வருகிறார்கள். பாதுகாப்பான வாழ்க்கைக்காக அவர்கள் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடல் மார்க்கமாக ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது தொடர்கதையாக உள்ளது.

Read more: “ஆளும் கட்சிக்கு சரிவு.. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான்..!” ராமநாதசுவாமி கோவில் பஞ்சாங்கம் வாசிப்பில் கணிப்பு..!

English Summary

Boat capsizes in Andaman Sea.. What is the condition of 250 people..?

Next Post

Walking| 3:3 ஃபார்முலா.. வாரத்தில் 5 நாட்கள் நடைபயிற்சி செய்தாலே போதுமே.. ஆரோக்கியம் நீளும்..!

Wed Apr 15 , 2026
| 3:3 Formula.. Walking 5 days a week is enough.. and your health will last..!
walk 2

You May Like