இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அருகே ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 84 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து, பெகாசி பகுதியில் திங்கட்கிழமை இரவு நிகழ்ந்தது. இரு விரைவு ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதியதால் பல பெட்டிகள் சிதறி நொறுங்கின. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தோனேசிய அரசு ரயில்வே நிறுவனமான PT கெரெட்டா அபி இந்தோனேசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பாபி ரசிடி, உயிரிழப்புகள் 14 ஆக உயர்ந்துள்ளதையும், பலர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதையும் உறுதிப்படுத்தினார்.
மீட்புப் பணிகள் மிகுந்த சவாலாக உள்ளதாக இந்தோனேசிய தேடல் மற்றும் மீட்பு அமைப்பு தலைவர் முகமது ஷாஃபி தெரிவித்தார். “சிலர் இன்னும் ரயில் உலோகங்களுக்குள் சிக்கியுள்ள நிலையில் உயிருடன் இருக்கிறார்கள். அவர்களை பாதுகாப்பாக மீட்பது மிகவும் நுட்பமான செயலாகும்,” என அவர் கூறினார்.
இந்த விபத்துக்கு முன்னர், பயணிகள் ரயில் தண்டவாளத்தில் இருந்த ஒரு டாக்சியுடன் மோதியதாகவும், அதன்பின் அதே பாதையில் வந்த ரயில் மோதியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பெண்கள் மட்டும் பயணிக்கும் பெட்டி கடுமையாக சேதமடைந்துள்ளது. விபத்தில் சிக்கிய டாக்சி, Green SM Indonesia நிறுவனத்துக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் விசாரணைக்கு தேவையான தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்கி வருவதாக கூறியுள்ளது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க ரயில் தண்டவாளங்களின் அருகே மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். ரயில்வே அமைப்பின் பராமரிப்பு குறைபாடுகளும் கவலைக்குரியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் உயிர் தப்பிய பயணியான ஹெரியதி, பெண்கள் பெட்டியில் செல்ல நினைத்திருந்தாலும், கடைசியில் வேறு பெட்டியைத் தேர்ந்தெடுத்ததால் தான் உயிர் தப்பியதாக கூறினார். விபத்து நடைபெற்ற இடத்தில் பலர் தங்கள் உறவினர்களைத் தேடி அலைய, சிலர் துயரத்தில் கண்கலங்கினர். ஒருவரின் இரத்தம் தோய்ந்த பையை கையில் பிடித்து அழுத காட்சி அனைவரையும் உருக்கியது.
Read more: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..! ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்த நபர் வெடிவிபத்தில் மரணம்..!



