காலை எழுந்தவுடன் ஒரு கப் சூடான டீ அல்லது காபி குடித்தால்தான் நாள் தொடங்கும் என்ற பழக்கம் இன்று பலரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அலுவலக அவசரம், நேரக்குறைவு போன்ற காரணங்களால் பலரும் காலை உணவை தவிர்த்து, வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடித்து நாளை தொடங்குகின்றனர். இது சாதாரண பழக்கம் போலத் தோன்றினாலும், நீண்ட காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இரவு முழுவதும் ஓய்வுக்குப் பிறகு எழும் உடலுக்கு குளுக்கோஸ் எனப்படும் ஆற்றல் மிகவும் அவசியம். ஆனால் காலை உணவை தவிர்த்து காபி மட்டும் குடிக்கும் போது, கஃபீன் மூளையை தற்காலிகமாக தூண்டினாலும் அது உண்மையான ஆற்றலை வழங்காது. இதனால் சில மணி நேரங்களில் மூளை சோர்வு, கவனம் குறைவு மற்றும் உடல் சோர்வு ஏற்படுகிறது. இதுவே வேலை திறனை நேரடியாக பாதிக்கக்கூடியதாகவும் மாறுகிறது.
மேலும், காலையில் கார்டிசோல் எனப்படும் மன அழுத்த ஹார்மோன் இயற்கையாகவே அதிகமாக இருக்கும் நிலையில், வெறும் வயிற்றில் காபி குடிப்பது அதன் அளவை மேலும் அதிகரிக்கிறது. இதனால் மனஅழுத்தம், பதட்டம், எரிச்சல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். நீண்ட காலத்தில் இது உடல் கொழுப்பு அதிகரிப்புக்கும் காரணமாகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிப்பது வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். தொடர்ந்து இந்த பழக்கம் நீடித்தால் வயிற்றுப் புண் போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல், காலை உணவை தவிர்ப்பதால் மெட்டபாலிசம் மந்தமாகி, உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
நிபுணர்கள் கூறுவதாவது, காபி அல்லது டீ குடிப்பது தவறு அல்ல. ஆனால் அது காலை உணவுக்கு மாற்றாக இருக்கக்கூடாது. எழுந்ததும் முதலில் தண்ணீர் குடித்து, பின்னர் இட்லி, தோசை, பழங்கள் அல்லது முட்டை போன்ற சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். உணவுக்குப் பிறகு காபி குடிப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Read more: செல்லப்பிராணிகளை தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்.. ஆரம்ப அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் இதோ..!



