தமிழகத்தின் புதிய முதல்வராக கடந்த 10 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே விஜய் நேரம் கடைப்பிடிப்பதில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவிற்கு காலை 8.48 மணிக்கே நேரு ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார். அதன்பிறகு நடந்த எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா, சபாநாயகர் தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே தலைமைச் செயலகம் வந்துவிட்டார்.
மேலும், நேற்று காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த விஜய், மாலை 4 மணி வரை அங்கேயே இருந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, முந்தைய அரசின் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிகாரிகளுடன் விவாதித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல், தலைமைச் செயலகத்திற்கு வரும் போது மதிய உணவையும் வீட்டிலிருந்து கொண்டு வந்து அங்கேயே அமர்ந்து சாப்பிடும் அவரது பழக்கம் அரசு அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பின்னர், மாலை 4 மணிக்கு, தனது பணிகளை முடித்துக்கொண்டு முதலமைச்சர் விஜய் வீடு திரும்பினார். அரசு ஊழியர் போல், அவர் வந்து சென்றதற்கு அதிகாரிகள், போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
விஜயின் தினசரி உணவுப் பட்டியலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காலை உணவாக இட்லி, முட்டை, பழங்கள் மற்றும் இளநீர் எடுத்துக் கொள்வதாகவும், மதிய உணவாக அரிசி சாதத்துடன் புரதச்சத்து நிறைந்த சிக்கன் அல்லது மீன் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதாகவும் கூறப்படுகிறது. இரவு உணவாக சூப், சாலட் அல்லது எளிதில் செரிமானமாகும் லேசான உணவுகளை தேர்வு செய்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே பதவியேற்பு விழாவில் அங்கிருந்த டேபிளை தானே தூக்கிச் சென்ற விஜயின் செயல் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்ட நிலையில், தற்போது தலைமைச் செயலகத்தில் அவர் கடைப்பிடிக்கும் எளிமையான நடைமுறைகளும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன.
Read more: 7 நிமிடங்களில் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை.. இந்தியாவில் ரோச் அறிமுகப்படுத்திய புதிய மருந்து..!



