உத்தரகாண்டின் ரிஷிகேஷ் அருகே காண்ட் காவ்ன் பகுதியில், யோக்நகரி ரயில் நிலையம் அருகே உஜ்ஜைன் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக, தடம் புரண்ட நேரத்தில் ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. முதற்கட்ட தகவலின்படி, வழக்கமான பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது பிரேக் செயலிழந்ததால் இந்த தடம் புரள்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சம்பவம் நடந்த பின்பும் சுமார் இரண்டரை மணி நேரம் மூத்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சம்பவ இடத்தில் உள்ளூர் மக்கள் அதிகளவில் திரண்டதால் பதற்றமான சூழ்நிலை உருவானது. பின்னர் ரயில்வே காவல் துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ரயில்வே அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். தடம் புரள்வுக்கான உண்மையான காரணம் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே ரயில்வே தொடர்பான தொடர் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், இந்த விபத்தும் அதே வரிசையில் புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக திங்கள்கிழமை காலை சசாரம் மாவட்டத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதற்கு முந்தைய நாள், ரத்லாம் மாவட்டத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது. இந்த இரண்டு தீ விபத்துகளிலும், தடம் புரள்வு சம்பவத்திலும் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படாதது மட்டுமே பெரிய நிம்மதியாக பார்க்கப்படுகிறது.



