பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக செவ்வாய்க்கிழமை இத்தாலி சென்றடைந்தார். ரோமில் அவரை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நேரில் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மெலோனி சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பிரதமர் மோடியை தனது நண்பர் என குறிப்பிட்டது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
மோடி–மெலோனி சந்திப்பு மீண்டும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், மெலோனியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவரங்களும் இணையத்தில் அதிகம் தேடப்பட்டு வருகின்றன.
யார் இந்த மெலோனி? இத்தாலியின் முதல் பெண் பிரதமராக சாதனையைப் படைத்தவர் ஜார்ஜியா மெலோனி. 2022ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற இவர், தனது சுயசரிதைப் புத்தகத்தில் கடினமான குழந்தைப் பருவம் முதல் அரசியல் உயர்வு வரை பல அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஒரு வயதிலேயே தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்ததும், பின்னர் வீடு தீ விபத்தில் எரிந்ததும் அவரது வாழ்க்கையின் தொடக்கத்தையே சவாலாக்கியது.
ரோம் நகரின் ஏழை தொழிலாளர் பகுதியான கர்பாடெல்லாவில் வளர்ந்த மெலோனி, சிறுவயதில் உடல் பருமன் காரணமாக கேலிக்கு உள்ளான சம்பவத்தையும் எதிர்கொண்டார். இதனால் உருவான மனவலிமை அவரை 15 வயதிலேயே அரசியல் இளைஞர் அமைப்பில் இணைந்து செயல்பட தூண்டியது. அந்த அனுபவமே பின்னர் அவரது அரசியல் பயணத்தின் அடித்தளமாக அமைந்தது.
2019ஆம் ஆண்டு அவர் ஆற்றிய புகழ்பெற்ற உரை மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்டு உருவான நையாண்டி இசை ரீமிக்ஸ், அவருக்கு எதிர்பாராத அளவில் பெரிய பிரபலத்தை ஏற்படுத்தியது. பல சவால்கள், விமர்சனங்கள் மற்றும் தனிப்பட்ட துயரங்களை கடந்து, 31 வயதில் இத்தாலியின் இளம் அமைச்சராக உயர்ந்த மெலோனி, பின்னர் நாட்டின் பிரதமராக உயர்ந்தார்.
மெலோனியின் தனிப்பட்ட வாழ்க்கை: அவரது முன்னாள் துணைவர் ஆண்ட்ரியா ஜியாம்பிரூனோ தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. ஆண்ட்ரியா ஜியாம்பிரூனோ ஒரு இத்தாலிய தொலைக்காட்சி பத்திரிகையாளர் மற்றும் செய்தி தொகுப்பாளர் ஆவார். இருவரும் 2014ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி ஸ்டுடியோ நிகழ்ச்சியின் போது முதன்முதலில் சந்தித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
திருமணம் செய்யாமல் இருந்தாலும், மெலோனி மற்றும் ஜியாம்பிரூனோ சுமார் 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். இந்த தம்பதியருக்கு 2016ஆம் ஆண்டு ஜினெவ்ரா என்ற மகள் பிறந்தார். அரசியல் பொறுப்புகளுக்கு இடையிலும் தனது குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்தி வந்தவர் என மெலோனி பலமுறை கூறியுள்ளார்.
2023 அக்டோபரில், ஜியாம்பிரூனோ தொடர்பான சர்ச்சை பதிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, இருவரும் பிரிந்ததாக மெலோனி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த சர்ச்சைக்கு பிறகு, தனது தனிப்பட்ட வாழ்க்கையை விட அரசியல் பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். வறுமையிலிருந்து அதிகாரத்தின் உச்சிக்கு சென்ற அவரது பயணம் பலருக்கும் உத்வேகமாக பார்க்கப்படுகிறது.



