திருச்சியில் நேற்று தவெக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய் தமிழக மக்களுக்கும் திருச்சி மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.. மேலும் திமுக மீது கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தார்.. அப்போது பேசிய அவர் “ ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை.. 6 மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்களால் 6 நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை.. கல்யாண வீட்டில் போய் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்..” என்று திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து பேசியிருந்தார்..
தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து பேசிய முதல்வர் விஜய் “ தமிழகத்தில் ஒரு ஊர் விடாமல் போதை பொருள் கலாச்சாம் பரவி உள்ளது.. ஆரம்பத்திலேயே இதை சரி செய்த்ருந்தால் இந்த பெண் குழந்தைகள், பெண்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்குமா..? எல்லாவற்றையும் நீங்கள் செய்து விட்டு, என் மீது பழி போடுறீங்க..? எத்தனை பழி போட்டாலும் மக்களை காக்கும் பணியை இந்த விஜய் செய்வான்..
பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் காவல்படை அடுத்த வாரம் தொடங்கப் போகிறோம்.. என்ன பழி நம் மீது போட்டாலும், உண்மையாக உறுதியாக மக்களுக்கு செய்ய வேண்டியதை விஜய் செய்து காட்டுவான்..” என்று தெரிவித்திருந்தார்.. மேலும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதா மேடம் தான் என்றும் முதல்வர் விஜய் பேசியிருந்தார்..
இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் எழிலன் முதல்வர் விஜய்யின் திமுக மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ சுயமரியாதை திருமண மேடைகள் தான் திமுகவின் பிரச்சார மேடை.. வரலாறு படித்திருந்தால் முதல்வருக்கு இது தெரிந்திருக்கும்.. தனக்கு கொடுக்கப்படும் ஸ்கிரிப்டை படித்தால் எப்படி தெரியும்..? 1989-ல் விவசாயிகளுக்காக இலவச மின்சார திட்டத்தை தொடங்கிய கலைஞர்.. இலவச மின்சாரத்தின் தொடக்கப்புள்ளி கலைஞர் தான்..
இந்த ஒரு மாதத்தில் எத்தனை பாலியல் வன்கொடுமைகள்..? எத்தனை ஆணவக் கொலைகள் நடந்து கொண்டே இருக்கிறது..? சட்டம் ஒழுங்கு குறித்து திமுக நோக்கி எழுப்பினீர்களே, நீங்கள் விட்ட அம்பு உங்களுக்கே திரும்பி வருகிறது.. அந்த அம்பு உங்களை நோக்கி வரும் போது கொஞ்சம் டைம் கொடுங்கள் என்று கேட்கிறீர்கள்.. தவெக அரசின் சோஃபா மாடல் சந்தி சிரிக்கிறது.. இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க..?
கேரளா, மேற்குவங்கத்திலும் ஆட்சி மாற்றம் நடந்தது.. அவர்கள் அறிவித்த திட்டங்களுக்கு கையெழுத்து போட தொடங்கிவிட்டனர்.. நீங்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்களை எப்போது செயல்படுத்தப் போகிறீர்கள்..? பிரதமரை சந்திக்கும் தமிழக முதல்வர்கள் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம்.. ஆனால் முதல்வர் விஜய் சந்திக்கவில்லை.. டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட போது கூட முதல்வர் விஜய் சந்திக்க மறுத்துவிட்டார்.. விஜய் எப்போது செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்..? ஆட்சிக்கு முன்னர் பேசியது போலவே ஆட்சிக்கு வந்த பின்னரும் அப்படியே பேசுகிறார் முதல்வர் விஜய்..” என்று தெரிவித்தார்..



