ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த மாதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25% ஆக இருந்தது..
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பணவீக்க அபாயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், கொள்கை வட்டி விகிதத்தை 5.25 சதவீதத்திலேயே மாற்றமின்றித் தொடர இந்திய ரிசர்வ் வங்கி இன்று முடிவு செய்துள்ளது..
ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதத்தில் மாற்றமின்றி வைத்திருக்க பணவியல் கொள்கைக் குழு (MPC) ஒருமனதாக (6–0) வாக்களித்ததாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார். உலகளாவிய மோதல்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பு கடும் சரிவு மற்றும் பருவமழை தொடர்பான அபாயங்கள் ஆகியவற்றால் நிலவும் மிகுந்த நிச்சயமற்ற சூழலில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ரெப்போ விகிதம் என்றால் என்ன..?
ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால கடன்களைப் பெறும்போது, ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமாகும். இந்த விகிதம், பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
உதாரணமாக, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கும், இதனால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தையும் அதிகரிக்கும். ஆனால் தற்போது ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்பதால் வங்கிகளும் கடன் விகிதத்தை மாற்றாது. இதனால் வாடிக்கையாளர்களுக்கும் வட்டி விகிதத்திலும், கடன்களுக்கான EMIயிலும் மாற்றம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : Flash : நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை..! எவ்வளவு தெரியுமா..?



