மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இளம் காதல் ஜோடி ஒன்று, கீற்றுக்கொட்டகையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு 19 வயதான பார்த்திபன் என்ற மகன் உள்ளார். சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் என்பவரின் 17 வயது மகள் திவ்யதர்ஷினியும் மாரிமுத்தும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் வீட்டார் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திவ்யதர்ஷினியின் உறவினர்கள் பார்த்திபனை சாதிப் பெயரைச் சொல்லி திட்டி, கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபனின் உறவினர்கள், பொறையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், விடிகாலையில் தனது மகளை காணவில்லை என்று திவ்யதர்ஷினியின் தந்தை லட்சுமிகாந்தன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், போலீசார் போன் சிக்னலை வைத்து சாத்தங்குடி பாம்பாலம்மன் கோவில் எதிரே உள்ள குமரேசன் என்பவருக்கு சொந்தமான இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு சின்ன கீற்றுக்கொட்டகையில் பார்த்திபனும், திவ்யதர்ஷினியும் தனித்தனியாகத் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளனர். உடனடியாக 2 உடல்களையும் மீட்ட போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இது தற்கொலை இல்லை, சாதி வெறியால் நடத்தப்பட்ட திட்டமிட்ட ஆணவக் கொலை என்று கூறி, பார்த்திபனின் உறவினர்களும் கிராம மக்களும் சாலை மறியல் ஈடுபட்டனர். மேலும், திவ்யதர்ஷினியின் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளை அதிரடியாக அடித்து நொறுக்கினர். இதனால், 200-க்கும் மேற்பட்ட போலீசார் அந்தப் பகுதியில் அதிரடியாகக் குவிக்கப்பட்டனர். மேலும், கொலை வழக்கு பதிவு செய்தால் மட்டுமே உடலைப் பெற்றுக்கொள்வோம் என்று பார்த்திபனின் உறவினர்கள் போராடியதால் போலீசாருக்கும் அவர்களுக்குமிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் 25 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதனிடையே, முன்தினம் தாக்குதல் புகாரின் அடிப்படையில் திவ்யதர்ஷினியின் அப்பா உட்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read: “என்னால பொண்டாட்டி டார்ச்சல் தாங்க முடியல” மனைவியால் 27 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!


