கனவு இல்லாத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது. தூக்கத்தில் தோன்றும் கனவுகள் மனிதர்களின் வாழ்க்கையின் ஒரு இயல்பான அங்கமாகவே கருதப்படுகின்றன. சில கனவுகள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்; சில கனவுகள் கவலையையும் பயத்தையும் உருவாக்கும். இன்னும் சில கனவுகள், “ஏன் இந்தக் கனவு வந்தது?” என்ற கேள்வியுடன் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். குறிப்பாக, உயிரிழந்தவர்கள் கனவில் தோன்றும்போது அதற்கு என்ன அர்த்தம் என்று பலரும் யோசிப்பார்கள். இதுபோன்ற கனவுகள் சிலருக்கு மனக் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி, அன்றாட வாழ்க்கையையே பாதிக்கக்கூடும். இறந்தவர்கள் கனவில் வருவது ஏன் என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
உங்கள் கனவில் இறந்த ஒருவர் மீண்டும் உங்களுடன் இணைவது போன்ற கனவு வந்தால், அது ஆறுதலானதும் இயல்பானதுமான அனுபவமாக இருக்கும். அதாவது, இறந்தவர்களுடன் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பது போல நீங்கள் உணர்ந்து, அவர்களுடன் இயல்பாக உரையாடுவது போன்ற சூழல் உருவாகும். இத்தகைய கனவுகள் ஒரு செய்தி அல்லது நம்பிக்கை போன்ற உணர்வை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், நீங்கள் அவர்களின் இழப்பிலிருந்து மெதுவாக மீண்டு வர வேண்டும் என்று உங்கள் மனதையே வழிநடத்துகிறது என்று கனவு சாஸ்திரம் விளக்குகிறது.
ஒரு சிலருக்கு இறந்தவர்கள் தங்களை ஆசீர்வதிப்பது போன்ற கனவு ஏற்படும். பொதுவாக, உங்கள் மனதிற்கும் மூளைக்கும் இடையே ஒரு போராட்டம் இருக்கும் போது அல்லது உங்கள் வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் திணறும்போது இது போன்ற கனவுகள் பலருக்கு ஏற்படும். இந்த கனவின் மூலம் உங்களுக்கு இருக்கும் தயக்கத்தை விட்டு விட்டு, நீ அடுத்த கட்டத்திற்கு போ என்று வழிநடத்துகிறது என்று கனவு சாஸ்திரம் விளக்குகிறது.
சில நேரங்களில் நாம் துன்பப்படுவது போன்ற கனவு ஏற்படலாம். அப்படி ஏற்படும் போது, அந்த கனவு உறவின் தீர்க்கப்படாத அம்சங்களைச் சீர்செய்ய அனுமதிக்கிறது. இறந்தவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவது போன்ற கனவு ஏற்பட்டால், அவர்கள் உங்களுக்கு வழிகாட்டவும், உங்கள் வாழ்க்கையில் உள்ள கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க உதவவும் விரும்புகிறார்கள் என்று அர்த்தம். அதன் மூலம் அவர்கள் நீங்கள் செல்ல வேண்டிய திசையை உங்களுக்கு காட்டலாம்.


