ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் 25 வயதான அங்கித். இவருக்கும் 22 வயதான ப்ரீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் முடிந்துள்ளது. ஆனால் அங்கித், ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான ரஜினி தேவி என்ற பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், தனது பெற்றோரின் கட்டாயத்தால் ப்ரீதாவை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த கடந்த மே மாதம் 21 அன்று ப்ரீதா காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ப்ரீதாவின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் ப்ரீதா கிடைக்கவில்லை. அது மட்டும் இல்லாமல், ப்ரீதாவின் மாமியார் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ப்ரீதாவின் தாய், சம்பவம் குறித்து கடந்த மே மாதம் 22 ம் தேதி அன்று மனேசர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், அங்கித் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ப்ரீதாவை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, மனேசரில் உள்ள ஒரு அறையிலிருந்து காணாமல் போன பெண்ணின் உடலை காவல்துறையினர் மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. பின்னர் போலீசார், அங்கித் மற்றும் அவரது காதலி ரஜினி தேவி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மனேசரில் புகையிலைக் கடையை நடத்தி வரும் அங்கித்திற்கும் அதே பகுதியில் அழகு நிலையத்தில் பணிபுரியும் ரஜினிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் உறவுக்கு தடையாக இருக்கும் ப்ரீதாவை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சம்பவத்தன்று அங்கித் தனது மனைவியை ரஜினியின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ப்ரீதாவை கொலை செய்துள்ளனர். பின்னர், அங்கித்தும் ரஜினியும் ஹரித்வாருக்குத் தப்பிச் சென்று, பின்னர் நேபாளத்தில் தலைமறைவாகியுள்ளனர்.
கடந்த ஜூன் 30 ஆம் தேதி வரை அங்கு இருந்துவிட்டு, பின்னர் இந்தியா திரும்பியுள்ளனர். இதையடுத்து, மனேசரில் குற்றப்பிரிவு குழுவினரால் கைது செய்யப்பட்ட இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், குற்றம் நடப்பதற்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் இருந்து வாங்கப்பட்டதாகவும், கொலையை நடத்துவதற்காகவே அந்த ஆயுதம் வாங்கப்பட்டதாகவும் விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: “குடும்பம் வேண்டாம், கள்ளக்காதலன் போதும்”… கள்ளத்தொடர்பால் அனாதையாக நிற்கும் பிஞ்சு குழந்தைகள்..!



