நாளை காலை நீங்கள் எழுந்து பார்த்தால் உங்கள் மொபைலில் இன்டர்நெட் இல்லாமல் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மெசேஜ்கள் அனுப்பப்படாது, பிடித்த ஆப்கள் திறக்காது, ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் செயல்படாது, அலுவலக மின்னஞ்சல்களும் நின்றுவிடும். முதலில் இது உங்கள் Wi-Fi பிரச்சனை என்று தோன்றலாம். ஆனால் விரைவில் இது எங்கும் நடப்பதை நீங்கள் உணருவீர்கள். உலகமே இணையம் இல்லாமல் முடங்கியுள்ளது. இது ஒரு திரைப்படக் கதை போல தோன்றினாலும், ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகிறது: ஒரு நாள் முழுவதும் பூமியில் இன்டர்நெட் முற்றிலும் செயலிழந்தால் என்ன நடக்கும்?
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தொடர்பு நிபுணர் ஜெஃப் ஹான்காக் கூறுவதாவது, இன்டர்நெட் இன்று தினசரி வாழ்க்கையில் இவ்வளவு ஆழமாக கலந்துவிட்டது என்பதால், மாணவர்களை ஒரு வார இறுதிக்கூட இணையம் இல்லாமல் இருக்கச் சொல்வது கூட சாத்தியமற்றதாகிவிட்டது.
ஒருமுறை அவர் தனது மாணவர்களுக்கு 48 மணி நேரம் இணையம் இல்லாமல் இருக்கும்படி ஒரு பணியை கொடுத்தார். ஆனால் 2009-ல் விடுமுறைக்கு பிறகு மீண்டும் அதே பணியை செய்ய முயன்றபோது மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், வகுப்புப் பணிகளை முடிக்க முடியாது, குடும்பத்துடன் தொடர்பு கொள்ள முடியாது, அல்லது தங்கள் ஆன்லைன் வாழ்க்கையில் திடீரென காணாமல் போனதை விளக்க முடியாது என்று கூறினர். அந்த பணியே ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்வு இணையம் எவ்வளவு ஆழமாக வாழ்க்கையில் இணைந்துவிட்டது என்பதை காட்டுகிறது.
பலர் இணையத்தை சமூக வலைதளங்கள் அல்லது வீடியோக்கள் பார்ப்பதற்கான கருவியாக மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் அது அதைவிட மிக அதிகமான பணிகளைச் செய்கிறது. வீட்டிலிருந்து வேலை செய்ய, டிக்கெட் பதிவு செய்ய, டிஜிட்டல் பணம் செலுத்த, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள, மருத்துவமனைகள் மற்றும் அரசு சேவைகளுடன் தொடர்பு கொள்ள என பல விஷயங்களுக்கு உதவுகிறது.
ஒரு நாள் இணையம் இல்லாமல் போனால், மக்கள் அன்றாடம் செய்கிற பல செயல்கள் கடுமையாக பாதிக்கப்படும். உதாரணமாக, ஒருவர் வேறு நகரத்திற்கு பயணம் செய்கிறார் எனக் கொள்வோம். அவரின் டிக்கெட் ஆன்லைனில் இருக்கும், ஹோட்டல் பதிவு ஆப்பில் இருக்கும், உணவுக்குப் பணம் டிஜிட்டலாக செலுத்துவார். இணையம் இல்லாமல் போனால் இந்த எல்லா செயல்களும் கடினமாகிவிடும்.
அலுவலகங்களில் இணையமே முக்கிய வேலைப்பாதையாக உள்ளது. மின்னஞ்சல், வீடியோ மீட்டிங், கிளவுட் ஆவணங்கள் போன்றவை அனைத்தும் இணையத்தை சார்ந்தவை. இணையம் இல்லாமல் போனால் வேலை முழுவதும் நிற்கும் நிலை ஏற்படும். மார்க்கெட்டிங் நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள் போன்றவை வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கும். மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள், டிஜிட்டல் நூலகங்கள் போன்றவை கிடைக்காது.
டிஜிட்டல் வங்கி சேவைகள் நிறுத்தப்படும். பில் கட்டுதல், பணம் பரிமாற்றம் போன்றவை கடினமாகும். சூப்பர் மார்க்கெட்டில் கூட பணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். ஆன்லைன் ஷாப்பிங் முற்றிலும் நிற்கும். மக்கள் தினசரி பயன்படுத்தும் மெசேஜிங் ஆப்கள் செயலிழக்கும். இதனால் பழைய காலம் போல நேரடி அழைப்புகள் அல்லது நேரில் சந்திப்பது மட்டுமே வழியாக இருக்கும். உலகளாவிய இன்டர்நெட்டை ஒரு ஸ்விட்ச் போட்டு நிறுத்துவது சாத்தியமில்லை. இது பல்வேறு நெட்வொர்க்குகள், சர்வர்கள், கேபிள்கள் மூலம் இயங்குகிறது.
சைபர் தாக்குதல்கள், முக்கிய சர்வர் சேதம், கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் சேதம், அரசாங்க கட்டுப்பாடுகள், சூரியப் புயல்கள் போன்ற காரணங்கள் இணையத்தை பாதிக்கலாம். ஒரு நாள் இணையம் இல்லாமல் போனால் வேலை, தொடர்பு, கல்வி, வணிகம் என அனைத்தும் பாதிக்கப்படும். ஆனால் அதே சமயம் அது இணையத்தின் முக்கியத்துவத்தை மனிதர்களுக்கு நினைவூட்டும் ஒரு அனுபவமாகவும் இருக்கும்.
Also Read: 13 வயது மூத்தவருடன் காதல் தொடர்பு… மனைவியை அழைத்து சென்று கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!



