முன்பெல்லாம் பணம் இல்லாவிட்டாலும், குடும்ப உறவுகளை நம்பி பலர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் மனிதன் முக்கியமா, பணம் முக்கியமா என்று வந்தால், எதைப் பற்றியும் யோசிக்காமல் பணமே முக்கியம் என்று நினைப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் உறவுகளை விட பணத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிறிய பணப் பிரச்சினைகளே கூட குடும்பங்களில் கடுமையான தகராறுகளுக்கும், சில நேரங்களில் அதிர்ச்சி சம்பவங்களுக்கும் காரணமாகி வருகின்றன. அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தில் பணத்திற்காக மனைவி ஒருவர் தனது கணவருக்கு செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் தாராப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 49 வயதான அவதேஷ் என்பவருக்கும், அவரது 45 வயது மனைவி ப்ரீத்தி தேவிக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அவதேஷுக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு ரூ.100 பணத்தை மையமாகக் கொண்டு கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறின் போது கணவர் தனது மனைவியை அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ப்ரீத்தி தேவி, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். நள்ளிரவில் வீட்டிலிருந்து புகை வெளியேறுவதை கவனித்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயில் கருகிய நிலையில் இருந்த அவதேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கணவர் தற்கொலை செய்து கொண்டதாக ப்ரீத்தி தேவி நாடகமாடியுள்ளார். ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கை, சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட பெட்ரோல் பாட்டில் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், கணவரை தீ வைத்து எரித்ததை ப்ரீத்தி தேவி ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெறும் ரூ.100 பணத்தை மையமாகக் கொண்டு கணவன் உயிரிழந்த இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read: 3 வயது குழந்தை துடிதுடித்து பலி… கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் செய்த அதிர்ச்சி செயல்!



