சமீப காலமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. அதிலும் குறிப்பாக, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தை சேர்ந்த அந்தோணிமுத்து மகன் 45 வயதான மரிய மைக்கேல். லாரி டிரைவரான இவருக்கு சபிதாரோனிகம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான மரிய நிரோஷா என்ற மகளும், 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயதான மரிய கெனிஸ்டன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி சபிதாரோனிகம், தனது கணவன் மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு தனியாக சென்றுவிட்டார். இதனால் மரிய மைக்கேல் தனது தந்தை அந்தோணிமுத்து மற்றும் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். தனது மனைவி பிரிந்து சென்றதால் மிகுந்த மன வேதனை அடைந்த மரிய மைக்கேல், தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மரிய மைக்கேல் தனது குழந்தைளுடன் உறங்கியுள்ளார். அந்தோணி முத்து, வீட்டுக்கு வெளியே படுத்திருந்தார். நள்ளிரவில் திடீரென எழுந்த மரிய மைக்கேல், தனது மகன் மற்றும் மகளின் கை, கால்களில் மின்சார ஒயரை சுற்றி வைத்து மின்சாரத்தை பாய்ச்சியுள்ளார். இதில் 2 குழந்தைகளும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர், மரிய மைக்கேல் தனது காலிலும் மின்சார ஒயரை சுற்றிக்கொண்டு மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பூட்டிய கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்றுள்ளனர். அங்கு தந்தை மற்றும் 2 குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகள், மகனை மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிட்ட லாரி டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



