சமூகத்தில் ஒழுக்கச் சீர்கேடுகள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறார் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாக பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இதற்கு பல்வேறு சமூக, குடும்ப மற்றும் கல்வி சார்ந்த காரணங்கள் இருப்பதாகவும் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் அணுகுமுறையும், பள்ளிகளில் ஒழுக்கம் கற்பிக்கும் சூழலும் மாறிவிட்டதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள் தவறு செய்தாலும் கண்டிப்பதற்கோ, திருத்துவதற்கோ தயக்கம் காணப்படுவதால், தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், விமர்சனங்களை எதிர்கொள்ளும் திறனும் சிலரிடம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, சிலர் சிறிய பிரச்சினைகளையே தாங்க முடியாமல் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். மேலும் சிலர் கோபத்தில் எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற மனநிலைக்கு ஆளாகின்றனர். அந்த வகையில், தற்போது சென்னையில் நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் 19 வயதான ராகேஷ். இவர் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், பிளஸ் டூ தேர்வில் இவர் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தால் தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் மனம் நொந்த ராஜேஷின் தாய், அவரைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், தனது தாயை எப்படியாவது பழிவாங்கி விடவேண்டும் என்று துடித்துள்ளார்.
அதன் படி, அவரின் தாய் தூங்கிக் கொண்டிருந்த போது தாயின் கழுத்தை நெறித்தும், கத்தியால் குத்தியும், கல்லால் அடித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார். அவரின் தந்தை வெளியே சென்ற நேரத்தில் ராஜேஷ் இந்தக் கொடூரக் கொலையை செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஷ் தாயின் சடலத்தை மீட்டனர். மேலும், பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த ராஜேஷை கைது செய்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில் ராஜேஷ், கடந்த சில மாதங்களாகவே மனநிலை பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்களின் மனநலமும் முக்கியமானது. எனவே, பெற்றோர் மதிப்பெண்களில் மட்டுமல்லாமல், குழந்தைகளின் மனநிலை, உணர்வுகள் மற்றும் நடத்தையிலும் கவனம் செலுத்தி, அவர்களுடன் மனம் திறந்து பேசி தேவையான ஆதரவை வழங்குவது காலத்தின் அவசியமாகும்.



