இந்த காலக்கட்டத்தில் நம் கைகளில் நாம் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்கள் முதல் சாலைகளில் ஓடும் ஸ்மார்ட் கார்கள் வரை அனைத்தும், ஒரு சிறிய ‘சிப்’ (chip) எனப்படும் செமிகண்டக்டரை (semiconductor) சார்ந்துள்ளன. 2035-ஆம் ஆண்டிற்குள் இந்தியா எவ்வாறு உலகின் புதிய “செமிகண்டக்டர் துறையின் மன்னனாக” (semiconductor king) உருவெடுக்க முடியும் என்பதை, நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை விவரித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, இந்தியா வெறும் சிப் சந்தையில் மட்டுமல்லாமல், 150 பில்லியன் டாலர் மதிப்பிலான வலுவான சந்தை மதிப்போடு, ஒட்டுமொத்த உலகளாவிய இத்துறையிலேயே ஒரு முன்னணி நாடாகத் திகழத் தயாராகி வருகிறது. இதைச் சாத்தியமாக்க, அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 180 பில்லியன் டாலர் வரையிலான மிகப்பெரிய முதலீடு தேவைப்படும்; இதில் மொத்தச் செலவில் மூன்றில் ஒரு பங்கை அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
வரும் பத்தாண்டுகளில், உலகளாவிய குறைக்கடத்தித் துறையின் புதிய ‘மன்னனாக’ இந்தியா உருவெடுக்கத் தயாராக உள்ளது. வெறும் சிப்களை வாங்குவதற்கான ஒரு சந்தையாக மட்டும் இல்லாமல், இத்துறையில் உலகளாவிய தலைவனாகத் தன்னை மாற்றிக்கொள்வதற்கான ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை இந்தியா கொண்டுள்ளது என்று நிதி ஆயோக் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.
நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் அசோக் குமார் லஹிரி சமர்ப்பித்த “இந்தியாவின் செமிகண்டக்டர் துறையின் எதிர்காலம்” (Future of India’s Semiconductor Industry) என்ற அறிக்கையின்படி, இந்தியா பிற நாடுகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, தனது சொந்த உத்திசார் பலங்களைக் கொண்டு உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஒரு தலைவனாகத் திகழ வேண்டும். 2035-ஆம் ஆண்டிற்குள், நாடு 120 முதல் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு பிரம்மாண்டமான செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலியை (value chain) உருவாக்கவுள்ளது என்பதை அந்த அறிக்கை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
தற்போது, தனது செமிகண்டக்டர் தேவைகளில் 90 முதல் 95 சதவீதம் வரை இந்தியா பிற நாடுகளையே சார்ந்துள்ளது. இருப்பினும், 2035-ஆம் ஆண்டிற்குள் சிப்களுக்கான உள்நாட்டுத் தேவை 200 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பெரிய அளவிலான சிப்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, நாட்டின் கருவூலத்திற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சர்வதேச விநியோகங்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால் உள்நாட்டுத் துறைகளையே முடக்கிவிடும் அபாயத்தையும் கொண்டுள்ளது. அதனால்தான், பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் இந்த நிலையை ஒழிப்பது தற்போது மிகவும் இன்றியமையாததாக மாறியுள்ளது.
சிப் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் மேம்பட்ட பேக்கேஜிங் (packaging) கட்டமைப்புகளை உருவாக்க, அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிற்கு 135 முதல் 180 பில்லியன் டாலர் வரையிலான மிகப்பெரிய மூலதன முதலீடு தேவைப்படும். தனியார் துறை முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கும் பொருட்டு, இந்த மொத்தச் செலவில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கையாவது அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
அரசாங்கத்தின் இத்தகைய பங்களிப்பு, திட்டத்தில் உள்ள இடர்பாடுகளைக் குறைப்பதுடன், பெரிய தனியார் நிறுவனங்கள் நீண்டகால முதலீடுகளுடன் முன்வருவதையும் ஊக்குவிக்கும். இந்தியா ஒரு வளர்ந்த நாடாக உருவெடுக்க வேண்டுமெனில், பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (AI), தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் பிற நாடுகளின் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பதை முழுமையாகக் களைய வேண்டும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
உலகளாவிய குறைக்கடத்திச் சந்தையானது 2014 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் 6.5% வளர்ச்சி கண்டுள்ளது.. வரும் நாட்களில் இது 8.5% என்ற விகிதத்தில் வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான வளர்ச்சியைத் தனதாக்கிக்கொண்டு, சந்தையில் ஒரு முன்னணி சக்தியாக உருவெடுக்க இந்தியா துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Read More : ஹோர்முஸ் மூடல்… ஆனாலும் இந்திய கப்பல்கள் பயணம்..! இந்தியாவின் ரகசிய உத்தி என்ன தெரியுமா..?



