மாற்றுத்திறனாளி கணவர் தவறி விழுந்து காயமடைந்ததாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து வந்த மனைவி, இறுதியில் போலீசாரின் விசாரணையில் சிக்கினார். 7 வயது மகனின் ஒரே ஒரு வாக்குமூலம், தாயின் பொய்யை அம்பலப்படுத்தியதோடு, கணவரின் கொலையும் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஹரி ராம் சிங். மாற்றுத்திறனாளியான இவருக்கு 30 வயதான சுனிதா தேவி என்ற மனைவியும், 7 வயதான மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த கடந்த 19-ந்தேதி தனது கணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறி அவரை சுனிதா தேவி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் தலையில் எப்படி காயம் ஏற்பட்டது என்று கேட்டதற்கு தனது கணவர் தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் ஹரி ராமை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், சுனிதா தேவியின் 7 வயது மகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுனிதா தேவி கணவரை கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதே சமயம், பிரதே பரிசோதனை அறிக்கையிலும் ஹரிராம் சிங் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, சுனிதா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது கணவர் தனக்கு சேலை வாங்கி கொடுக்காததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும், இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் சுனிதா குக்கர் மூடியால் தலையில் தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, சுனிதா மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read: ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த சிறுவன்… தனியாக கிடந்த தலை; நெஞ்சை பதைபதைக்கும் கொடூரம்!



