ஒரு குழந்தை பெத்துக்க உன்னால முடியல!” என்று குடும்பத்தினர் தொடர்ந்து அவமானப்படுத்தி திட்டியதால் மனமுடைந்த இளம்பெண், விரக்தியில் விபரீத முடிவெடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை இல்லாததை காரணமாகக் கொண்டு நீண்ட நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளான அவர், இறுதியில் எடுத்த முடிவு குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரேட்டகெரே பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான காவியா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் பெங்களூர் நெலமங்களா பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த காவியாவிற்கு 3 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால், காவியா தொடர்ந்து மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
மேலும், அவரது கணவரின் குடும்பத்தினர் காவியாவை மனரீதியாக காயப்படுத்தினர். அது மட்டும் இல்லாமல், அவரை வரதட்சணைக் கேட்டும் துன்புறுத்தி உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே கணவர் நவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் காவியாவைத் தொடர்ந்து பல்வேறு வழிகளில் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்துள்ளனர். இதனால், காவியா மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த காவியா, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காவியாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வரதட்சணைக் கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாகக் காவியாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 ஆண்டுகளிலேயே இளம் பெண் வரதட்சணை மற்றும் குடும்பத் தகராறால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்ப பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



