சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களை சரியாகத் தேர்வு செய்வதும் ஆரோக்கியத்தின் ஒரு பகுதிதான். குறிப்பாக கட்டிங் போர்டு தேர்வில் பலருக்கும் குழப்பம் இருக்கும். மர கட்டிங் போர்டா? பிளாஸ்டிக் கட்டிங் போர்டா? இரண்டில் எது பாதுகாப்பானது, நீண்ட நாட்கள் பயன்படுத்த ஏற்றது என்பதை தெரிந்து கொள்வோம். காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்றவற்றை நறுக்க தினமும் பயன்படுத்தப்படும் பொருள்தான் கட்டிங் போர்டு. ஆனால், எந்த வகை கட்டிங் போர்டை பயன்படுத்துவது நல்லது என்பது பலரின் சந்தேகமாக உள்ளது.
மரத்தாலான கட்டிங் போர்டுகள் கத்தியின் கூர்மையை நீண்ட நாட்கள் பாதுகாக்க உதவுகின்றன. மரத்தின் இயற்கையான அமைப்பு கத்தியின் தாக்கத்தை மென்மையாக ஏற்றுக்கொள்வதால், கத்தி விரைவில் மழுங்காது. தரமான மரப் பலகையை சரியாக பராமரித்தால் பல ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். மர கட்டிங் போர்டை பயன்படுத்திய பிறகு வெந்நீர் மற்றும் சோப்பால் நன்றாக கழுவி முழுமையாக உலர்த்த வேண்டும். அவ்வப்போது உணவுப் பயன்பாட்டிற்கு ஏற்ற மினரல் ஆயிலை தடவினால், பலகை நீண்ட நாட்கள் நல்ல நிலையில் இருக்கும்.
சில வகை மரங்களில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை குறைக்கும் இயற்கை தன்மை இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், எந்த கட்டிங் போர்டாக இருந்தாலும் சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் கிருமிகள் வளர வாய்ப்பு உள்ளது. பிளாஸ்டிக் கட்டிங் போர்டுகள் விலை குறைவாக கிடைக்கும். எடை குறைவாக இருப்பதால் பயன்படுத்தவும் எளிது. பலவற்றை டிஷ்வாஷரில் அதிக வெப்பத்தில் சுத்தம் செய்ய முடிவதால், பராமரிப்பும் சுலபமாக இருக்கும். குறிப்பாக இறைச்சி மற்றும் மீன் நறுக்க தனி பிளாஸ்டிக் பலகையை பயன்படுத்துவது நல்ல பழக்கமாக கருதப்படுகிறது.
ஆனால், பிளாஸ்டிக் கட்டிங் போர்டுகளில் கத்தி பயன்படுத்தும்போது விரைவில் கீறல்கள் உருவாகும். அந்த இடங்களில் உணவுத் துகள்களும் கிருமிகளும் தேங்கலாம். மேலும், அதிகமாக சேதமடைந்த பிளாஸ்டிக் பலகைகளில் இருந்து சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உணவில் கலக்கும் சாத்தியம் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, ஆழமான கீறல்கள் ஏற்பட்டால் அந்த பலகையை மாற்றுவது நல்லது. காய்கறிகள், பழங்கள் மற்றும் சமைத்த உணவுகளுக்கு மர கட்டிங் போர்டையும், இறைச்சி மற்றும் மீன்களுக்கு தனி பிளாஸ்டிக் கட்டிங் போர்டையும் பயன்படுத்துவது சுகாதாரமான முறையாக கருதப்படுகிறது.
நீண்ட கால பயன்பாடு, கத்தியின் கூர்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தேர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டால், மரத்தாலான கட்டிங் போர்டு பலருக்கும் சிறந்த தேர்வாக இருக்கும். அதே நேரத்தில், எந்த கட்டிங் போர்டை பயன்படுத்தினாலும் அதை சுத்தமாக பராமரிப்பதே உணவு பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது.
Also Read: சிம்ரனை நேரில் சந்தித்த 10 வயது சிறுமி… அடுத்த நொடி நடந்த நெகிழ்ச்சி தருணம்!



