இதய நோய் திடீரென வருவதில்லை. பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பே உடல் சில அறிகுறிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கத் தொடங்கும். ஆனால் பெரும்பாலானோர் அவற்றை சாதாரண சோர்வு அல்லது வயது காரணமாக நினைத்து அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். குறிப்பாக காலையில் எழுந்தவுடன் அடிக்கடி இந்த அறிகுறிகள் இருந்தால், அது இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். எந்த அறிகுறிகளையும் புறக்கணிக்காமல் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம்.
1. காரணமில்லாத அதிக சோர்வு
காலையில் போதுமான தூக்கம் எடுத்த பிறகும் உடல் மிகவும் சோர்வாக இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இதயம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அளவு ரத்தத்தை பம்ப் செய்ய சிரமப்படும்போது, உடலில் சக்தி குறைந்து சோர்வு ஏற்படலாம்.
2. மார்பில் அழுத்தம் அல்லது அசௌகரியம்
எழுந்தவுடன் மார்பில் பாரம் இருப்பது போல் உணர்வு, இறுக்கம், எரிச்சல் அல்லது லேசான வலி இருந்தால் அது இதயத்திற்கு போதிய ரத்த ஓட்டம் இல்லாததற்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறி மீண்டும் மீண்டும் தோன்றினால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
3. மூச்சுத்திணறல் அல்லது அதிக வியர்வை
காலையில் எழுந்தவுடன் எந்த வேலைக்கும் செல்லாமல் மூச்சு வாங்குவது, அல்லது உடல் முழுவதும் அதிக வியர்வை ஏற்படுவது இதயத்தின் செயல்பாட்டில் பிரச்சினை இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக இதனுடன் மார்பு அசௌகரியமும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
இதய நோயின் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு இந்த அறிகுறிகள் வேறு உடல்நலக் காரணங்களாலும் ஏற்படலாம். இருப்பினும், இவை தொடர்ந்து இருந்தாலோ அல்லது மோசமடைந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் முக்கியம். ஆரம்பத்திலேயே கண்டறிவது, இதய நோயால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளைத் தடுக்க உதவும்.
Also Read: கேஸ் அடுப்பா? இண்டக்ஷன் அடுப்பா? ஆரோக்கியத்திற்கு எது பாதுகாப்பு? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!



