சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, திமுகவில் அமைப்புகளை முழுமையாக மறுசீரமைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 12 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்குப்பெட்டி மூலமாக உட்கட்சித் தேர்தலை நடத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அடைந்த பின்னடைவை அடுத்து, கட்சியின் கிளை முதல் தலைமை நிர்வாகம் வரை உள்ள அனைத்துக் கட்டமைப்புகளையும் சீரமைப்பதற்காக 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்திருந்தார். இக்குழுவினர் கட்சி அமைப்பை வலுப்படுத்துவது குறித்த தங்களது விரிவான பரிந்துரை அறிக்கையைத் தலைமையிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அந்த அறிக்கையில், மாவட்ட எல்லைகளை மறுவரையறை செய்து நிர்வாக வசதிக்கு ஏற்ப பிரிப்பது, இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அனைத்துச் சார்பு அணிகளையும் மறுசீரமைப்பது என பல முக்கிய ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், நிரந்தரத் தேர்தல் மேலாண்மை அமைப்பை உருவாக்குதல், அரசியல் முடிவுகளை விரைந்து எடுக்க ‘உயர்நிலை செயல்திட்ட சிந்தனைக் குழு’ அமைத்தல் போன்ற நடைமுறைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கட்சி நிர்வாகிகளைத் தேர்வு செய்யும்போது பழைய நியமன முறையைக் கைவிட்டு, தொண்டர்களின் வாக்குகள் மூலம் தேர்வாகும் ஜனநாயக முறையைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. போட்டி நிலவும் இடங்களில் கட்டாயம் வாக்குப்பெட்டிகளை வைத்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், உட்கட்சித் தேர்தலைத் தடையின்றி நடத்த உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், கடந்த 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் வாக்குப்பெட்டி வாயிலாக திமுகவில் ஜனநாயக முறையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
Read More : விவசாயிகளுக்கு ஜாக்பாட்..!! ரூ.6,000 நிதியுதவி திட்டம் நீட்டிப்பு..!! மத்திய அரசு அதிரடி..!!



