தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசின் ஒரு ரூபாய் வருவாயில் எந்தெந்த துறைகளிலிருந்து எவ்வளவு பணம் கிடைக்கிறது மற்றும் எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது என்பது குறித்த விரிவான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயை கணக்கிடுகையில், அரசுக்கு கிடைக்கும் ஒரு ரூபாயில் அதிகபட்சமாக 43.3 சதவீதம் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மூலமாகவே பெறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, 33.1 சதவீதம் பொதுக்கடன் மூலமாகவும், 11.9 சதவீதம் மத்திய அரசின் வரிகளிலிருந்து கிடைக்கும் பங்காகவும் உள்ளது. இவை தவிர, 6.3 சதவீதம் மத்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் மூலமாகவும், 5.3 சதவீதம் மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாயாகவும் கிடைக்கிறது. கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு 0.1 சதவீதமாகப் பங்களிக்கிறது.
அரசு ஈட்டும் ஒரு ரூபாய்க்கான செலவினங்களை பொறுத்தவரை, பெரும் பகுதி உதவித் தொகைகள் மற்றும் மானியங்களுக்காகவே ஒதுக்கப்படுகிறது. அதாவது, ஒரு ரூபாயில் 33.2 சதவீதம் மானியங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்காகச் செலவிடப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக, அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு 17.3 சதவீதமும், பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி செலுத்துவதற்கு 15.0 சதவீதமும் செலவாகிறது.
மேலும், மாநிலத்தின் வளர்ச்சி சார்ந்த மூலதனச் செலவினங்களுக்கு 10.9 சதவீதமும், பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு 9.9 சதவீதமும் ஒதுக்கப்படுகிறது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பலன்களுக்கு 8.0 சதவீதமும், பராமரிப்பு மற்றும் தினசரி செயல்பாடுகளுக்கு 3.8 சதவீதமும், கடன் வழங்குவதற்காக 1.9 சதவீதமும் பயன்படுத்தப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : தமிழகத்தின் மொத்த கடன் எத்தனை கோடி தெரியுமா? வட்டி மட்டுமே இவ்வளவா? நிதியமைச்சர் பரபரப்பு தகவல்..!!


