குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளாக இருந்தாலும், ஆண் குழந்தைகளாக இருந்தாலும் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குழந்தைகளின் நடத்தையில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட பெற்றோர் கவனிக்க வேண்டும் என்றும், அவர்கள் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் அலட்சியப்படுத்தாமல் கேட்பது இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க உதவும் என்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அந்தக் கொடூரத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்த வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 42 வயதான அந்த நபர், மதுரா மாவட்டத்தின் கோவர்தன் பகுதியில் வசித்து வந்துள்ளார். தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்த அவர், அங்கு பெற்றோருடன் வசித்து வந்த 10 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அதோடு, அந்தச் சம்பவத்தை தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீண்ட நாட்களாக நடந்த இந்தக் கொடுமையை தாங்க முடியாமல், சிறுமி தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, வீட்டு உரிமையாளரை கைது செய்தனர். அவர்மீது குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ (POCSO) சட்டம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் மதுரா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பெற்றோர்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், குழந்தைகள் திடீரென பயம், பதற்றம் அல்லது நடத்தையில் மாற்றம் காட்டினால் உடனடியாக அவர்களிடம் பேசி உண்மையை அறிய முயற்சிக்க வேண்டும் என்றும் குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.



