பள்ளி என்றாலே மாணவர்களின் பாதுகாப்பான உலகமாக இருக்க வேண்டும். ஆனால், துப்பாக்கிச்சூடு போன்ற கொடூர சம்பவங்கள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே அரங்கேறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், தாய்லாந்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தின் பாங்காக்கின் வடமேற்கு பகுதியில் உள்ள நொந்தபுரி மாகாணத்தின் பாங் க்ருவாய் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள டெப்சிரின் நொந்தபுரி பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு அந்த மாணவரும் உயிரிழந்ததாக தாய்லாந்து தேசிய போலீஸ் செய்தித் தொடர்பாளர் ட்ரைரோங் பிவ்பான் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியில் இருந்த மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆம்புலன்ஸ்கள் பள்ளி வளாகத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றன. மீட்புப் பணிகளின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. சம்பவத்தை நேரில் அனுபவித்த 18 வயது மாணவர் ஒருவர், முதலில் பட்டாசு வெடிக்கும் சத்தம் அல்லது யாரோ பொருளை பலமாக அடிக்கும் சத்தம் என்று நினைத்ததாக கூறியுள்ளார். பின்னர் தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், சிறிது நேரம் அமைதியாக இருந்த பின்னர் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் பள்ளிகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடைபெறுவது இது முதல் சம்பவம் அல்ல. கடந்த பிப்ரவரி மாதம் தெற்கு தாய்லாந்தின் ஹாட் யாய் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்ததுடன், மாணவர் ஒருவர் காயமடைந்தார். தற்போது நொந்தபுரி பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்திற்கான முழுமையான காரணம் மற்றும் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
Also Read: ஓடும் பைக்கிலேயே பிறந்த குழந்தை!… பிரசவ நேரத்தில் கணவர் செய்த காரியம்; வைரலாகும் வீடியோ!



