வரலாற்றிலேயே முதன் முறையாக உலகின் மிக சக்திவாய்ந்த தொலைநோக்கியை(Telescope) பயன்படுத்தி சூரியனின் மேற்பரப்பை இதுவரை காணாத புதிய மற்றும் மிகத் துல்லியமான விவரங்களுடன் படம் மற்றும் வீடியோ மூலம் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இந்த புதிய பதிவுகளில், இந்த புதிய பதிவுகளில், முன்பு நேரடியாகக் காணப்படாத சிறிய சுழல் வடிவ இயக்கங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
ஆய்வாளர்களின் விளக்கப்படி, சூரியனின் உள் பகுதியில் உள்ள அதிக வெப்பமுள்ள வாயுக்கள் தொடர்ந்து நகர்வதால், சூரியனின் காந்தப்புலம் முறுக்கப்பட்டு சுழலும் இயக்கம் உருவாகிறது. இந்த நிகழ்வுகளே பின்னர் மிகப்பெரிய சூரிய வெடிப்புகள் மற்றும் காந்த ஆற்றல் வெளியீடுகளுக்கான முக்கிய காரணமாக செயல்படுகின்றன. இது ‘விண்வெளி வானிலை’ எனப்படும் நிகழ்வை உருவாக்குகிறது. இது பூமியின் மின் கட்டமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள்களைப் பாதிக்கக்கூடியது, அத்துடன் விண்வெளி வீரர்களுக்கு கூட ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
“அந்த ஆற்றலுக்கும், அந்த விண்வெளி வானிலை நிகழ்வுகள் அனைத்திற்கும் சூரியனே மூலமாகும்,” என்று அமெரிக்காவின் தேசிய சூரிய ஆய்வகத்தைச் (NSO) சேர்ந்த டாக்டர் டேவிட் போபோல்ட்ஸ் விளக்கினார். நமது சூரிய மண்டலத்தின் நட்சத்திரமான சூரியனின் மிகத் துல்லியமான படங்களைப் பெறுவது, இந்த விண்வெளி வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ள உதவும் என்று அவர் கூறினார்.
உலகின் மிக சக்திவாய்ந்த சூரியத் தொலைநோக்கியால் படம் பிடிக்கப்பட்ட சூரியனின் மேற்பரப்பின் மிக நெருக்கமான காட்சி இதுவாகும். இது தீப்பிழம்பு போன்ற ஆரஞ்சு நிற ஒளியையும், மேற்பரப்பில் இலைகளின் நரம்பமைப்பைப் போன்ற வடிவங்களையும் காட்டுகிறது. இந்த வடிவங்கள் சூரியனின் மேற்பரப்பில் உள்ள “நிலையற்ற சுழல்களுக்கு”சான்றாக உள்ளன.சூரியனின் மேற்பரப்பு அல்லது ‘ஃபோட்டோஸ்பியர்’ பகுதியின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட படங்கள் இவையாகும். ஹவாயில் அமைந்துள்ள இனோயே சூரிய தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, Nature ‘நேச்சர்’அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது. எதிர்காலத்தில் விண்வெளி வானிலையை துல்லியமாக கணித்து, பூமியின் தொழில்நுட்ப அமைப்புகளை பாதுகாப்பதற்கு இந்த கண்டுபிடிப்பு முக்கிய பங்காக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.



