மாநில உரிமைகள் மற்றும் கொள்கை விஷயங்களில் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் தமிழக அரசும், முதலமைச்சரும் ஒருபோதும் பணியமாட்டார்கள் என்று அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மாநில சுயாட்சி, கொள்கைவாதம் மற்றும் சமூக நீதி குறித்து திமுக பேசுவது முரண்பாடாக உள்ளது. கடந்த கால ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் விவகாரங்கள் காரணமாகவே, வேறு வழியின்றி பாஜகவின் பிடியில் அவர்கள் விழும் சூழல் உருவானது. கொள்கை ரீதியான அணுகுமுறை இல்லாமல், சுயநலத்திற்காகவும் குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்காகவும் திமுக செயல்படுவது வேதனையளிப்பதாக தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்பும் சரி, தற்போதும் சரி, எந்தவொரு அரசியல் அழுத்தத்திற்கும் பயந்தோ அல்லது பணிந்தோ செல்லும் நிலையில் இந்த அரசு இல்லை என்றார். காவிரி விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விரிவாகப் பேசியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், காவிரி விவகாரத்திற்காக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படவில்லை என்ற ஒரே காரணத்தை கூறி, தொகுதி மறுவரையறை தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்தது தவறான அணுகுமுறை என்றார்.
தொகுதி மறுவரையறை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரம் என்பதால், அதன் தீவிர உணர்ந்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
Read More : இபிஎஸ்-க்கு எதிராக பாய்ச்சல்..!! எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!



