அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டாக கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர்கள் எழுதிய கடிதத்தில், “2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி எடுத்த சில ஒருதலைப்பட்சமான முடிவுகளாலேயே கட்சி தொடர் பின்னடைவை சந்தித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். அண்மையில் வெற்றிபெற்ற 47 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 25 பேர், தலைமை எடுத்த தவறான நகர்வுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.
2021 சட்டமன்ற தேர்தலின் போதே டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தியும், அதை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால் சுமார் 42 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுக்க நேரிட்டது.
2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்த தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போன்ற தோழமைக் கட்சிகளை 2021 தேர்தலில் தக்கவைக்காமல் வெளியேற்றியதும் பின்னடைவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக டெல்லி தலைமை பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், தேடிவந்த பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் கூட்டணி வாய்ப்புகளைத் தன்னிச்சையாக நிராகரித்ததால், திமுக – காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் எளிதாக வெற்றிபெற வழிவகுத்ததாகக் காரசாரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதனால் பல அதிமுக வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலிலும் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்படும் என அறிவித்துவிட்டு, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளுடனான கூட்டணி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணடித்ததாக அவர்கள் சாடியுள்ளனர். தொடர்ச்சியாக 2021, 2024 மற்றும் 2026 ஆகிய மூன்று முக்கியத் தேர்தல்களிலும் வெற்றி பெற வாய்ப்பிருந்தும், தலைமையின் தன்னிச்சையான முடிவுகளால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, கட்சி நலனைக் கருத்தில் கொண்டு, இதுவரை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் அதே பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என்றும்; சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோருடன் பேசி அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகக் கட்சியை ஒருங்கிணைத்து வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் கூறியுள்ளனர்.
Read More : அடேங்கப்பா..!! 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி செலவு செய்த பணம் எத்தனை கோடிகள் தெரியுமா..?



