கர்நாடகாவில் கூலித் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. தனது தாயுடன் அந்த தொழிலாளி தொடர்பில் இருந்ததாக அறிந்த அவரது மகன், நண்பரின் உதவியுடன் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகா அருகே உள்ள பீலகி பகுதியில் கடந்த ஜூன் 27-ம் தேதி மலைப்பகுதியில் இளைஞர் ஒருவர் அரை நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார்.
தகவல் கிடைத்ததும் பீலகி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தவர் முதோல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (26) என்பதும், கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் மற்றும் கொலை கோணங்களில் விசாரணையை தொடங்கி, சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், பிரகாஷ் கொலை தொடர்பாக முதோல் பகுதியைச் சேர்ந்த சீனிவாஸ் மற்றும் அவரது நண்பர் நதீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரகாஷுக்கும் சீனிவாஸின் தாயான 45 வயது பசம்மாவுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து வந்ததாகவும், இந்த விவகாரம் சீனிவாஸுக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் பிரகாஷ் மீது ஆத்திரமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரகாஷை கொலை செய்ய சீனிவாஸ் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 27-ம் தேதி தனது நண்பர் நதீமுடன் சேர்ந்து பிரகாஷை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மூவரும் மதுகுடித்ததாகவும், பின்னர் பிரகாஷ் போதையில் இருந்தபோது அவரை தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கல்லால் தலையில் தாக்கி பிரகாஷை கொலை செய்துவிட்டு, இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர். சம்பவம் தொடர்பாக சீனிவாஸ் மற்றும் நதீம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பீலகி போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: கணவன்-மனைவி தகராறு.. ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி!



