காதல் உறவில் ஏற்பட்ட சந்தேகம் மற்றும் பொறாமை, இளம்பெண்ணின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்ற சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை விட்டு வேறொரு ஆணுடன் காதலி பழகுவதாக அறிந்த இளைஞர், அவரை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம் கரம்புடி பகுதியைச் சேர்ந்தவர் பாலா சைதுலு. சிலகலூரி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் ஹசீனா (24). இருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வந்துள்ளனர்.
தேர்வு எழுதுவதற்காக சென்றபோது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டதாகவும், பின்னர் அந்தப் பழக்கம் காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, தேர்வில் பாலா சைதுலு தோல்வியடைந்த நிலையில், ஹசீனா தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் அவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு பணியாற்றியபோது ஹசீனாவுக்கு மற்றொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பாலாவுக்கு தெரியவந்ததும் அவர் கடும் ஆத்திரமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹசீனா தன்னை விட்டு வேறு ஒருவருடன் பழகுவதை ஏற்க முடியாமல், அவரை கொலை செய்ய பாலா திட்டமிட்டதாக கூறப்படுகிறது. திட்டத்தை செயல்படுத்தியதாக கூறப்படும் நாளில், வீட்டில் தனியாக இருந்த ஹசீனாவை பாலா செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். தன்னை நேரில் சந்திக்க வேண்டும் எனக் கூறி அவரை வெளியே வரவழைத்துள்ளார். இதனை நம்பி வெளியே வந்த ஹசீனாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு ஹசீனாவிடம், மற்றொரு ஆணுடன் ஏற்பட்ட பழக்கம் குறித்து பாலா கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பாலா கத்தியால் ஹசீனாவை தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் தடயங்களை மறைக்கும் நோக்கில் உடலை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து பாலா சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஹசீனா நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் கவலையடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ஹசீனா கடைசியாக யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது உள்ளிட்ட தகவல்களை சேகரித்தபோது பாலா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஹசீனாவின் உடல் சுமார் 80 சதவீதம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. பாலாவை பிடித்து விசாரித்தபோது, காதலி வேறு ஒருவருடன் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பாலா சைதுலுவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காதல் உறவில் ஏற்பட்ட பொறாமை காரணமாக இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டித்த கணவர்.. இரும்புக் கம்பியால் கொன்ற காதலன்!



