தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த கணவர், மனைவியின் செல்போனை சோதித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்ததாக கூறப்படும் சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரை சாலை விபத்து போல சித்தரித்து கொலை செய்ய மனைவி, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டதாக கூறப்படும் நிலையில், அந்த உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களை கணவர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். மஹபூபாபாத் மாவட்டம் சிலாகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் காடே ராஜேஸ்வர் ராவ். கம்மம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் பவானி என்ற பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளாக குடும்ப வாழ்க்கை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சென்றதாக கூறப்படும் நிலையில், கடந்த ஜூலை 27-ம் தேதி எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. வழக்கமாக மதிய உணவுக்காக வீட்டுக்கு வராத ராஜேஸ்வர் ராவ், அன்று திடீரென வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனது மனைவி பவானி, வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்ததாக ராஜேஸ்வர் ராவ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அந்த நபர் சைதுலு என்பதும், கம்மம் பகுதியில் கூரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருவதும் பின்னர் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குடும்பத்தினர் மற்றும் கிராம பெரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கிராம பஞ்சாயத்து மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி நடைபெற்றதாக தெரிகிறது. இதற்கிடையே, பஞ்சாயத்தில் தனது சகோதரரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை அழைக்க ராஜேஸ்வர் ராவ் அருகிலுள்ள பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சைதுலு அவரை பின்தொடர்ந்து வந்து தாக்க முயன்றதாகவும், ராஜேஸ்வர் ராவ் அங்கிருந்து தப்பி வீட்டுக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு தனது உயிருக்கு ஆபத்து இருக்கலாம் என சந்தேகித்த ராஜேஸ்வர் ராவ், மனைவியின் செல்போனை சோதனை செய்துள்ளார். அப்போது வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பவானி மற்றும் சைதுலு இடையே நடந்ததாக கூறப்படும் உரையாடல்களை பார்த்துள்ளார். அதில், ராஜேஸ்வர் ராவை சாலை விபத்து போல் சித்தரித்து கொலை செய்வது குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த உரையாடல்களைப் பார்த்த ராஜேஸ்வர் ராவ், அவற்றை ஸ்கிரீன்ஷாட்களாக சேமித்து வைத்துள்ளார்.
தனது உயிருக்கு பாதுகாப்பு கோரி ஆகஸ்ட் 1-ம் தேதி தோர்ணக்கல் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். புகாரை பெற்ற தோர்ணக்கல் போலீசார் முதற்கட்டமாக ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, மேல் விசாரணைக்காக வழக்கை கம்மம் கிராமப்புற காவல் நிலையத்துக்கு மாற்றியுள்ளனர்.
தற்போது ராஜேஸ்வர் ராவ் அளித்துள்ள டிஜிட்டல் ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பவானி மற்றும் சைதுலுவிடம் விசாரணை நடத்தி, புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது குறித்து சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். கணவரை விபத்து போல கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் இந்த விவகாரம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டித்த கணவர்.. இரும்புக் கம்பியால் கொன்ற காதலன்!



