கள்ளக்காதல் உறவுக்கு கணவர் இடையூறாக இருப்பதாக கருதிய மனைவி, தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு போலீஸ் விசாரணையில் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடகலதா கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு கவாடே (40). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கு பங்காரி என்ற மனைவி உள்ளார்.
பங்காரிக்கும், ரகுவின் உறவினரான ராம ராணா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவாக மாறியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், இந்த விவகாரம் ரகுவுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனைவியையும், ராம ராணாவையும் கண்டித்துள்ளார். ஆனால் இதற்குப் பிறகும் அவர்களது தொடர்பு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், ரகு உயிருடன் இருக்கும் வரை தங்களது உறவுக்கு பிரச்சினை ஏற்படும் என பங்காரியும் ராம ராணாவும் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து சுமார் 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து ரகுவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை தோட்டத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர். கணவர் காணாமல் போனது குறித்து குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில், ரகு ஆடு மேய்ப்பதற்காக வெளியூருக்குச் சென்றுள்ளதாக பங்காரி கூறி வந்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் ரகு வீடு திரும்பாததால் அவரது அண்ணன் லகமன்னாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிக்கோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கி பங்காரியிடம் விசாரித்தனர். அவரது பதில்களில் முரண்பாடுகள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், ரகுவை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து பங்காரி மற்றும் ராம ராணா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். ரகுவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தையும் அவர்கள் அடையாளம் காட்டினர். பின்னர் போலீசார் அந்த இடத்தில் தோண்டி ரகுவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: அழுவது பலவீனம் இல்லையாம்!… மனம் விட்டு அழுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?



