பான் மசாலா பொட்டலங்களுக்கான விதிகளில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பான் மசாலாவை பேக்கிங் செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்களில் பிளாஸ்டிக் சார்ந்த அல்லது பிளாஸ்டிக் லேமினேட் செய்யப்பட்ட உறைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய ஃபாயில் கவர்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, FSSAI வெளியிட்ட செய்திக்குறிப்பில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மத்திய அரசின் முன் அனுமதியுடன் 2018-ஆம் ஆண்டின் பேக்கிங் விதிகளில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய திருத்த விதிகள், 2026’ என அழைக்கப்படும் என்றும், இது அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திருத்தத்தின்படி, பான் மசாலா பேக்கிங் செய்ய அனுமதிக்கப்பட்ட பொருட்களில் காகிதம், அட்டை, செல்லுலோஸ் மற்றும் இயற்கையாக பெறப்பட்ட பொருட்கள் மட்டுமே அடங்கும். இந்தப் பொருட்களில் பாலிஎதிலின், பாலிப்ரொப்பிலின், பாலியஸ்டர் மற்றும் பாலிவினைல் குளோரைடு உள்ளிட்ட எவ்விதமான பிளாஸ்டிக் கலப்பும் இருக்கக் கூடாது. மேலும், செயற்கை பாலிமர்கள், அலுமினிய ஃபாயில் அல்லது உலோக அடுக்குகள் ஆகியவையும் பேக்கிங்கில் கண்டிப்பாக இடம்பெறக் கூடாது என திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, பான் மசாலாவை அடைத்து வைக்க தகரம் அல்லது கண்ணாடிப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-ன் தொடர்புடைய விதிகளும் இந்த புதிய கட்டுப்பாடுகளுக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில், உணவுகளை பேக் செய்யவும், மடிக்கவும், பரிமாறவும் செய்தித்தாள்களைப் பயன்படுத்தக் கூடாது என உணவு வணிக நிறுவனங்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது. செய்தித்தாள் அச்சடிக்கப் பயன்படும் மையில் உள்ள ரசாயனங்கள் நுகர்வோருக்கு கடுமையான சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டது. மும்பையில் பிரபலமான வடா பாவ் வியாபாரி ஒருவர் உணவை வழங்க செய்தித்தாள்களைப் பயன்படுத்திய சம்பவம் சமீபத்தில் பேசுபொருளான நிலையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.



