தமிழக முதலமைச்சர் விஜய்க்காக புதிய அலுவலகம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமை செயலக கட்டிடத்தில் முதலமைச்சர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் மற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ் முதலமைச்சருக்கான பிரத்யேக அறை, அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களுக்கான பணியிடங்கள், கூட்ட அரங்குகள், வருகையாளர் காத்திருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பணிகளை விரைவாக நிறைவு செய்யும் நோக்கில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பொதுப்பணித்துறை சார்பில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய அலுவலகம் அமைக்கும் நடவடிக்கை அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பணிகள் நிறைவடைந்த பிறகு முதலமைச்சர் அலுவலகம் அங்கு செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read:100 மடங்கு சொத்து வரி உயர்வு..! மக்கள் தலையில் பேரிடி..! தவெக அரசுக்கு வலுக்கும் கண்டனம்..!



