உணவில் என்ன இருக்கிறது என்பதை நுகர்வோர் அறிய வேண்டும்.. 2 வாரங்களில் முடிவெடுக்க FSSAI-க்கு கெடு!

6a584dcaf9361f415a4d828af67835f60a7fc4abf3fc1d896a30c5d4540823d3

பாக்கெட் உணவுப் பொருட்களில் அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட கொழுப்பு இருந்தால், அதுகுறித்த எச்சரிக்கை தகவலை பேக்கெட்டின் முன்பக்கத்தில் குறிப்பிடுவது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI-க்கு உச்சநீதிமன்றம் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பாக்கெட் உணவுகளில் உள்ள சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பின் அளவை நுகர்வோர் எளிதாக அறிந்துகொண்டு உணவு தேர்வு செய்யும் வகையில், பேக்கெட்டின் முன்பக்கத்தில் எச்சரிக்கை லேபிள் இடம்பெற வேண்டும் என்பதே இந்த வழக்கின் முக்கிய கோரிக்கையாகும்.

FSSAI-யின் கூட்டம் தொடர்பான குறிப்புகளை நீதிமன்றம் பரிசீலித்தபோது, முன்பக்க எச்சரிக்கை லேபிள் நடைமுறையை அமல்படுத்துவதில் தயக்கம் இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. உணவு உற்பத்தி நிறுவனங்களின் அழுத்தத்திற்கு FSSAI உள்ளாகிறதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு எந்தவொரு குறிப்பிட்ட உணவுப் பொருளையோ அல்லது நிறுவனத்தையோ குறிவைப்பதற்காக அல்ல என்றும், மக்கள் குறிப்பாக குழந்தைகள் உட்கொள்ளும் உணவுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதே நோக்கம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்தியாவின் பாரம்பரிய உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளும் புதிய எச்சரிக்கை விதிகளால் பாதிக்கப்படலாம் என்ற வாதமும் விசாரணையின்போது முன்வைக்கப்பட்டது. மத்திய அரசு மற்றும் FSSAI சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிரிஜேந்தர் சஹார், இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் பாரம்பரிய உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், சர்வதேச அளவுகோல்களை அப்படியே இந்தியாவில் அமல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என தெரிவித்தார்.

நம்கீன் உள்ளிட்ட பாரம்பரிய உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, முட்டை போன்ற உணவுகளுக்கும் எச்சரிக்கை லேபிள் தேவைப்படும் சூழல் உருவாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பாரம்பரிய உணவுப் பொருட்களின் விற்பனை மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கணிசமான வருவாய் ஈட்டுவதால், புதிய விதிமுறைகள் அவற்றையும் பாதிக்கக்கூடும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், இந்த வாதங்களை ஏற்காத உச்சநீதிமன்றம், உணவுப் பொருட்களில் சர்க்கரை, கொழுப்பு, கார்போஹைட்ரேட் போன்றவை இருப்பது குறித்து நுகர்வோருக்கு ஏற்கனவே தெரியும் என்றாலும், அவற்றின் அளவு குறித்த தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முன்பக்க எச்சரிக்கை லேபிளின் நோக்கம் என தெரிவித்தது.

மேலும், உணவு உற்பத்தியாளர்களின் வணிக நலனை விட பொதுமக்களின் உடல்நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாக்கெட் சிற்றுண்டிகளை உட்கொள்வது குறித்தும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். நுகர்வோர் தாங்கள் வாங்கும் உணவுப் பொருளை அதன் ஊட்டச்சத்து தகவல்களை அறிந்து தேர்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் FSSAI தங்களது இறுதி முடிவை இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் உரிய முடிவு எடுக்கப்படாவிட்டால், நீதிமன்றமே அடுத்தகட்ட உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்றும் அமர்வு எச்சரித்துள்ளது.

முன்னதாக, 2025 ஏப்ரலில் இதுதொடர்பாக FSSAI அமைத்த நிபுணர் குழு தனது பரிந்துரைகளை இறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், இந்திய ஊட்டச்சத்து மதிப்பீட்டு முறையை நிபுணர் குழு பரிசீலித்ததாகவும், பல்வேறு தரப்பினரிடமிருந்து 14,000-க்கும் மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டதாகவும் FSSAI நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

முன்பக்க எச்சரிக்கை லேபிள் முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், மேலும் ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் FSSAI தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் மீண்டும் கடுமையான கேள்விகளை எழுப்பி, இரண்டு வார காலக்கெடு வழங்கியுள்ளது.

Also Read: முதல்வர் விஜய் அலுவலக அறை மாற்றம்.. ரூ.5 கோடியில் புதிய ஏற்பாடுகள்!

Saranya

Next Post

மாணவர்களுக்கு போராட உரிமை உண்டு.. NALSAR விவகாரத்தில் BCI-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி!

Fri Aug 14 , 2026
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் NALSAR (National Academy of Legal Studies and Research) எனப்படும் தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில், BCI (Bar Council of India) தலையிட்டதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மாணவர்கள் அமைதியான முறையில் தங்களது கருத்துகளை தெரிவிக்கவும், போராட்டம் நடத்தவும் உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. NALSAR என்றால் என்ன? NALSAR என்பது ஹைதராபாத்தில் […]
39bb9d313987ba3b31efac3d8a5ad0125c5470369c132ff5fa8ec67abc50d1f3

You May Like