பான் மசாலா விளம்பரத்தால் வெடித்த சர்ச்சை..!! 3 பாலிவுட் நடிகர்களுக்கு பறந்தது நோட்டீஸ்..!!

Pan Masala 2026

பான் மசாலாவை மறைமுகமாக விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகிய 3 பேருக்கும் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, அதாவது FDA நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


கடந்த 2024-ம் ஆண்டு விமல் ஏலக்காய் விளம்பரத்தில் இந்த 3 நடிகர்களும் நடித்திருந்தனர். விமல் என்ற பிராண்ட் பெயர் பான் மசாலாவுடன் சந்தையில் பரவலாக தொடர்புபடுத்தப்படுவதால், ஏலக்காய் விளம்பரமும் பான் மசாலாவை மறைமுகமாக விளம்பரப்படுத்துவதாக இருக்கிறதா என்ற கேள்வியை மகாராஷ்டிரா FDA எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் பான் மசாலா தொடர்பான சில பொருட்களுக்கு தடை இருப்பதால், இந்த விளம்பரம் நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால், விமல் ஏலக்காய் உண்மையில் தனிப்பட்ட பொருளா? அல்லது பான் மசாலாவை மறைமுகமாக விளம்பரப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டதா? என்பதை விளக்கும்படி நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், விளம்பரத்தில் தங்களது பங்கு என்ன, நிறுவனத்துடன் என்ன மாதிரியான ஒப்பந்தம் செய்யப்பட்டது? எவ்வளவு தொகை வழங்கப்பட்டது, விளம்பரத்தை தயாரித்த நிறுவனம் யார்? விளம்பரத்தில் நடிப்பதற்கு முன்பு என்ன மாதிரியான ஆய்வுகளை மேற்கொண்டனர் என்பது போன்ற விவரங்களையும் FDA கேட்டுள்ளது. அந்த விளம்பரம் ஒளிபரப்பப்பட்ட டிவி சேனல்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்கள் குறித்த விவரங்களையும் சமர்ப்பிக்கும்படி கூறப்பட்டுள்ளது.

மேலும், விளம்பரத்தில் பங்கேற்பதை உடனடியாக நிறுத்தவும், தங்களது சமூக வலைதள பக்கங்களில் உள்ள விளம்பரப் பதிவுகளை அகற்றவும் FDA உத்தரவிட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும்.

விளக்கம் அளிக்கவில்லை என்றாலோ, அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றாலோ, சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என FDA எச்சரித்துள்ளது. தவறாக வழிநடத்தும் உணவு விளம்பரங்களை வெளியிடுவதற்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும்.

மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தவறான விளம்பரத்தில் நடித்த பிரபலங்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதமும், மீண்டும் தவறு நடந்தால் ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்க வாய்ப்பு உள்ளது. அதோடு, குறிப்பிட்ட காலத்திற்கு விளம்பரங்களில் பொருட்களை ஆதரிப்பதற்கும் தடை விதிக்க முடியும். எனவே, ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராப் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்துதான் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். இதற்கான பதில் அடுத்தகட்ட விசாரணையில் தெரியவரும்.

Read More : இந்த 2 அமைச்சர்களிடம் கொஞ்சம் கவனமா இருங்க..!! முதல்வர் விஜயை எச்சரிக்கும் டெல்லி..!!

Next Post

அரசுப் பள்ளியில் திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாட்டம்..!! ரீல்ஸ் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய தொண்டர்கள்..!!

Sun Aug 16 , 2026
அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்திற்குள் விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை கொண்டாடி, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வீடியோவை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக பதிவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட அரசியல் சார்ந்த நிகழ்வுகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை கடுமையான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்துள்ளது. இந்த நடைமுறையை மீறி, தேனி மாவட்டம் பெரியகுளம் […]
Thiruma School 2026

You May Like