கர்நாடக மாநிலம் சகலேஷ்பூரில் லாட்ஜ் அறையில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் இரண்டு இளைஞர்கள் தங்கியிருந்த நிலையில், இருவரையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சகலேஷ்பூர் தாலுகா ஹெத்தூர் ஹோப்ளியின் வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. கடந்த 11-ம் தேதி பெங்களூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், இரண்டு இளைஞர்களுடன் அங்கு அறை எடுத்து தங்கியுள்ளார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு லாட்ஜ் அறையில் அந்த இளம்பெண் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த லாட்ஜ் நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு சகலேஷ்பூரில் உள்ள கிராபோர்ட் பொது மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து லாட்ஜ் நிர்வாகியிடம் விசாரணை நடத்தி, அறை தொடர்பான பதிவுகள் மற்றும் அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து போலீசார் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இளம்பெண்ணுடன் அறையில் தங்கியிருந்த இரண்டு இளைஞர்களும் தற்போது போலீசாரின் விசாரணை வளையத்தில் உள்ளனர். அவர்கள் யார், இளம்பெண்ணுடன் அவர்களுக்கு என்ன தொடர்பு, அறையில் தங்கியிருந்தபோது என்ன நடந்தது என்பதற்கான தகவல்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.
இளம்பெண்ணின் மரணத்துக்கு உடல்நலக் குறைபாடா, வேறு காரணமா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே தெளிவாகும். அதே நேரத்தில், இரண்டு இளைஞர்களின் பின்னணி மற்றும் அவர்கள் சென்ற இடம் குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் போலீஸ் விசாரணை முடிவில் இளம்பெண்ணின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.
Also Read: “என்ன தொடாதீங்க” கதறிய சிறுமி.. பரிகார நிலையத்தில் சாமியார் செய்த காரியம்; சோதனையில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்!



