விமான நிலையங்களில் பயணிகள் கொண்டு செல்லும் ஆயுதங்களை சோதனை செய்யும் போது மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. சிறிய கவனக்குறைவுகூட எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கும். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி விமான நிலையத்தில் ஆயுத சோதனையின்போது துப்பாக்கியில் இருந்து திடீரென குண்டு பாய்ந்ததில் 2 பாதுகாப்பு ஊழியர்கள் காயமடைந்தனர்.
வாரணாசி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை சுமார் 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் பகுதியைச் சேர்ந்த கம்லேஷ் ராய் என்பவர் தனது மனைவியுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX-1810 மூலம் மும்பை செல்ல வந்திருந்தார். அப்போது, தன்னிடம் ஆயுதம் இருப்பதாக கம்லேஷ் ராய் விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து வழக்கமான ஆயுத சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக அவரது துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டு பாய்ந்தது.
இதில் AAICLAS நிறுவனத்தைச் சேர்ந்த 2 பாதுகாப்பு சோதனையாளர்கள் காயமடைந்தனர். பெண் ஊழியரின் காலிலும், ஆண் ஊழியரின் கட்டைவிரலிலும் குண்டு பாய்ந்தது. உடனடியாக இருவரும் சிகிச்சைக்காக நியூ லட்சுமி டிராமா சென்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். பயணி வைத்திருந்த துப்பாக்கி உரிமம் பெற்றது என தெரியவந்துள்ளது.
எனினும், பயணி கொண்டு வந்த ஆயுதம் தொடர்பான கூடுதல் விவரங்கள், துப்பாக்கி எவ்வாறு எதிர்பாராத விதமாக வெடித்தது மற்றும் காயமடைந்த 2 ஊழியர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த தகவல்கள் விமான நிலைய இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. விமான நிலையத்தில் நடந்த இந்த திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: பாஜகவில் நாளை புதிய நிர்வாகிகள் குழு அறிவிப்பு?… அதிரடி அமைப்பு மாற்றத்திற்கு தயாராகும் கட்சி!



