செல்ஃபி எடுக்கப்போவதாக கூறி ஒரு வயது குழந்தையை தந்தையே ஆற்றில் வீசிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை காப்பாற்றுமாறு தாய் கதறிய நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் குழந்தையின் தந்தையை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆற்றில் விழுந்த குழந்தையை மீட்க தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ரிங்கு. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று கணவன், மனைவி மற்றும் குழந்தை என மூவரும் ஆக்ராவை சுற்றிப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்துள்ளது. இதற்கிடையே அவர்கள் யமுனை ஆற்றுப்பாலத்தை அடைந்துள்ளனர். அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்திய ரிங்கு, தனது மனைவியிடம் குழந்தையுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
பின்னர் குழந்தையை தூக்கிக்கொண்டு பாலத்தின் நடைபாதை பகுதிக்கு சென்றுள்ளார். மனைவி சற்று தொலைவில் இருந்த நிலையில், குழந்தையுடன் செல்ஃபி எடுத்த ரிங்கு, திடீரென குழந்தையை ஆற்றில் வீசியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த லட்சுமி அதிர்ச்சியடைந்து கணவரை நோக்கி ஓடிச்சென்றுள்ளார். குழந்தையை ஆற்றில் வீசியது குறித்து கணவரிடம் அவர் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது லட்சுமியையும் ஆற்றில் தள்ள ரிங்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பிய லட்சுமி, அங்கு வந்த பொதுமக்களிடம் தனது குழந்தையை காப்பாற்றுமாறு உதவி கேட்டுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் ரிங்குவை பிடித்து தாக்கியதுடன், போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து ஆற்றில் குழந்தையை தேடும் பணியை தொடங்கினர். நீண்ட நேரமாக தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், ரிங்குவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Also Read: 6 மாத திருமண வாழ்க்கை… மனைவி மறுத்ததால் மனமுடைந்த கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு!



