காதல் திருமணம் செய்து ஆறு மாதங்களே ஆன நிலையில், மனைவியுடனான குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் ஒரு இளைஞரின் வாழ்க்கையை சோகத்தில் முடித்துள்ளது. மனைவி மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் மனமுடைந்த 28 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துமகூரு மாவட்டம் குனிகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாவீர் காலனியைச் சேர்ந்தவர் அவினாஷ் (28). ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்த அவினாஷ், இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், மனைவியின் சொந்த ஊரில் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இதற்காக பெற்றோர் வீட்டுக்குச் சென்ற அவர், நீண்ட நாட்களாகியும் கணவர் வீட்டுக்குத் திரும்பவில்லை.
இதனால் கவலையடைந்த அவினாஷ், செல்போனில் மனைவியை தொடர்புகொண்டு காரணம் கேட்டுள்ளார். மனைவியிடம் இருந்து எதிர்பார்த்த பதில் கிடைக்காததால், அவரை நேரில் அழைத்து வருவதற்காக தனது பெற்றோருடன் ஹாசனுக்குச் சென்றுள்ளார் அவினாஷ். அங்கு மனைவியிடம் வீட்டுக்கு திரும்பி வருமாறு கேட்டுள்ளார். ஆனால், அவினாஷுடன் தொடர்ந்து குடும்பம் நடத்த விருப்பமில்லை என்றும், அவருடன் வாழ பிடிக்கவில்லை என்றும் மனைவி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவினாஷ், கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.
இந்த சூழலில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவினாஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் வீட்டுக்கு திரும்பிய பெற்றோர், மகன் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற குனிகல் போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவினாஷின் தற்கொலைக்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: 4 வயது பேத்திக்கு பாலியல் வன்கொடுமை… இளைஞரை அரிவாளால் வெட்டிய பாட்டி!



