கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் எதிர்பாராத அளவுக்கு கூட்டம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமாவளவன் மேடைக்கு வந்தபோது அவரை நெருங்குவதற்காக தொண்டர்கள் ஒரே நேரத்தில் முன்வந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவரது உரையும் முழுமையாக நடைபெறவில்லை. மாநாட்டுக்காக காலை முதலே தொண்டர்கள் உளுந்தூர்பேட்டையில் திரண்டனர்.
மாலை திருமாவளவன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தபோது, அவரை வரவேற்கவும் சந்திக்கவும் ஏராளமானோர் மேடையை நோக்கி சென்றனர். தொண்டர்களை சந்திப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் பகுதியில் கூட்டம் அதிகரித்ததால், நிலைமையை கட்டுப்படுத்த திருமாவளவனே மேடையில் இருந்து கீழே இறங்கினார். ஆனால், அவரைச் சுற்றி தொண்டர்கள் திரண்டதால் மீண்டும் நெரிசல் ஏற்பட்டது. சிலர் அவரது கைகளையும் கால்களையும் பிடித்ததால், அவர்களை விலகுமாறு திருமாவளவன் அறிவுறுத்தினார்.
கூட்ட நெரிசலில் சிலர் மயங்கி விழுந்தனர். அவர்களை பாதுகாப்புப் பணியாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிலைமை சீராகாததால் திருமாவளவன் தனது நீண்ட உரையைத் தவிர்த்து, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மட்டும் வாசித்தார். பின்னர் மாலை 5.30 மணியளவில் அவர் மேடையை விட்டு வெளியேறினார். இந்த பரபரப்புக்கு நடுவிலும் மாநாட்டின் முக்கிய அரசியல் அறிவிப்பு கவனம் பெற்றது. தமிழக அரசியல் களத்தில் தவெகவுடன் விசிக இணைந்து பயணிக்கும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
இதுவரை திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசியல் சூழலில் தவெகவுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் விசிக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு வளர வேண்டும் என்பதே இலக்கு என்றும் அவர் கூறினார். திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ் தேசியம் தொடர்பாக 125 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியலை முன்னெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. தமிழகத்தின் மொழி, இன, பண்பாட்டு மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாக்க மாநில சுயாட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. கல்வி, பொருளாதாரம், நிர்வாகம், கலை மற்றும் பண்பாடு உள்ளிட்ட துறைகளில் மாநிலங்களுக்கான அதிகாரத்தை விரிவுபடுத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாநாட்டின் தொடக்கத்தில் திருமாவளவன் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். அதன்பின்னர் மாநாட்டின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.



