முதுமலையில் தொடரும் வறட்சி… 10 நாட்களில் 3 யானைகள் உயிரிழப்பு..!

elephant death

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, கடந்த 10 நாட்களில் 3 காட்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால் இயற்கையான நீர்நிலைகள் வறண்டு வரும் நிலையில், வனவிலங்குகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக, மசினகுடி வனச்சரகத்தில் குறுகிய கால இடைவெளியில் 3 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8-ந்தேதி ஒரு யானையும், குதிரைப்பாறை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் யானையும் உயிரிழந்தன. இதைத் தொடர்ந்து அதே பகுதியில் மேலும் ஒரு பெண் யானை உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

வனப்பகுதியில் உள்ள சிறிய ஓடைகள், குட்டைகள் மற்றும் இயற்கை நீர்த்தேக்கங்கள் மழை குறைவு காரணமாக வறண்டு வருகின்றன. இதனால் யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.குறிப்பாக யானைகளுக்கு தினசரி அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுவதால், வறட்சி காலத்தில் அவை கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குடிநீருடன் மட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும் பசுந்தாவரங்களின் கிடைப்பும் குறைவதால் வனவிலங்குகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகிறது.

வனவிலங்குகளின் தாகத்தைத் தணிக்கும் வகையில், லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று செயற்கைத் தொட்டிகளில் நிரப்பும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த யானைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன்மூலம் வறட்சி காரணமா அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனவா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. வனப்பகுதியில் தொடரும் வறட்சியால் வனவிலங்குகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Also Read:BREAKING | அரசுப் பெண் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! இனி 3-வது குழந்தைக்கும் சம்பளத்துடன் ஓராண்டு மகப்பேறு விடுப்பு..!! அமைச்சர் அறிவிப்பு..!!

Newsnation_Admin

You May Like